By Village Missionary Movement
Monday, 03-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 03.11.2025
பிசாசின் சோதனை
"...இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டார்." - மத்தேயு 4:1
சீனாவில் மீன்பிடி கப்பலில் அரிய வகை மீன் ஒன்று பிடிப்பட்டது. உடனே அதை அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். இதுவரை எந்த மீனிலும் இல்லாத சுவையாக இருந்தது. அதை ஏராளமாக பிடித்து, 4 நாட்கள் கழித்து கரைக்கு கொண்டு வந்தனர். அந்த மீன்களை தண்ணீரில் போட்டு உயிருடன் கொண்டு வந்து அதை சமைத்து சாப்பிட்ட போது, கடலில் 4 நாட்களுக்கு முன் சாப்பிட்ட அந்த சுவை இல்லை. அதனால் சந்தையில் அதிக விலைக்கு விற்க முடியாமல் போனது. மீனின் சுவை குறைவதற்கு காரணம், கொஞ்ச தண்ணீரில் உயிருடன் இருந்தாலும், கடலில் துள்ளிக்குதித்து விளையாடி சுறு சுறுப்பாய் இருந்தது போல் அது இல்லாமல் 4 நாட்களும் மந்தமாக இருந்ததால், அதன் சுவை குறைந்தது என்று அறிந்தனர். இப்பொழுது அந்த மீன்களை சுறு சுறுப்பாக கரைக்கு கொண்டு வர, அந்த மீன்களுடன் அதன் எதிரியான சுறாமீன்களின் குஞ்சுகளை போட்டு கொண்டு வந்தனர். அந்த மீன்கள் சுறா மீன்களின் குஞ்சுகளுக்குப் பயந்து அங்குமிங்கும் ஓடியதால், கரைக்கு கொண்டு வரும் வரை சுறு சுறுப்பாக இருந்தது. அந்த மீனை சாப்பிட்ட போது நடுக்கடலில் சமைத்து சாப்பிட்ட அதே ருசி இருந்தது. அதை சந்தையில் விற்ற போது நாளுக்கு நாள் அம்மீனின் மதிப்பு அதிகரித்தது.
நாமும் கூட பிசாசினால் சோதிக்கப்படுவது நல்லது என்றே நினைக்க வேண்டும். பல விதமான சோதனைகளை பிசாசினாலேயே நாம் சந்திக்கிறோம். இயேசுவுக்கே பிசாசின் சோதனை அவசியமானால் நமக்கு எவ்வளவு தேவை. பச்சை மரத்துக்கே பாடுகள், பட்ட மரத்துக்கு என்ன பாடுகள் இருக்கும்? பாடுகளை கண்டு, நாம் பயந்து விடக்கூடாது. ஒரு பக்தன் ஆண்டவரிடம் இவ்விதமாக கேட்பாராம், "இன்று எனக்கு என்ன பாடுகளை வைத்திருக்கிறீர்? என்று. நாமும் அவ்வாறே கேட்க வேண்டும். பாடுகளை வேலைகளாக கருத வேண்டும். இன்று எனக்கு என்ன வேலை வைத்திருக்கிறீர்? வேலையாள் கூலிக்குப் பாத்திரன். நாம் கடின உழைப்பாளி என்றால், நமக்கு கடினமான பாடுகள் இருக்கும் அதற்கேற்ற பலன்களும் மிகுதியாயிருக்கும்.
இயேசு கிறிஸ்து எல்லாரையும் விட அதிக பாடுகள் பட்டார். சிலுவை மரத்தில் அவரை அழித்துவிட நினைத்த பிசாசுக்கு அது ஏமாற்றம் ஆனது. பவுல் அப்போஸ்தலனுக்கு சென்ற இடமெல்லாம் பாடுகள் வந்தது. அதை நல்ல போராட்டம் என்று பவுல் கூறி, இதற்காக எனக்கு நீதியின் கிரீடம் பரிசாக உள்ளது என்கிறார்.
பிசாசு, தேவராஜ்யத்தை கட்டும் பணிக்கு பல வித மனிதர்களைக் கொண்டே சோர்வையும், வேதனையையும் நெகேமியாவுக்கு அளித்தது போல் நமக்கும் அளிப்பான். நெகேமியா 52 நாட்களில் அலங்கத்தை கட்டியது போல், நாமும் எதிர்ப்பின் மத்தியிலும் அதிகமாய் செயல்பட்டு பலன் பெறுவோம். ஆமென்.
- Rev.D. செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:-
ஒவ்வொரு தாலுகாவிலும் இரண்டு இரண்டு தெபோரள்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864