By Village Missionary Movement
Sunday, 02-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 02.11.2025
உதவி செய்
"நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே." - நீதிமொழிகள் 3:27
ஒரு பெரிய காட்டில் ஒரு சிறிய யானைக்குட்டி தன் அம்மா, அப்பா, அக்கா, அண்ணா யானைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. அந்த குட்டி யானை ரொம்ப குறும்பு செய்கிற யானையாக இருந்தது. எப்போதும் துறு துறு வென்று இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு நாள் யானைக்குட்டி தன் குடும்பத்தினருடன் காட்டிலுள்ள குளத்திற்கு தண்ணீர் குடிக்கச் சென்றது. அங்கு நீரில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தது. யானையின் குறும்புத்தனத்தை மரத்திலிருந்து பார்த்துக்கொண்டேயிருந்தது ஒரு சிறிய குருவி. அது, குட்டி யானையிடம், நாம் இருவரும் நண்பர்களாக இருக்கலாமா? என்று கேட்டது. அதைக் கேட்ட குட்டி யானை கோபமடைந்து, நிலத்தில் வாழும் பெரிய மிருகமான நான், உன்னோடு நட்பு கொள்ள வேண்டுமா? என்று கூறி திட்டி விட்டது. அந்த குருவியும் சோகத்துடன் யானையின் விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் யானை குடும்பம் தங்கள் இடத்திற்கு கிளம்பின. வழியில் ஒரு கரும்புத் தோட்டத்தைக் கண்ட குட்டியானை, தன் பெற்றோருக்கு தெரியாமல் கரும்பை சாப்பிட ஆசைபட்டு தோட்டத்திற்குள் சென்று விட்டது. அப்பொழுது தோட்டக்காரர் வரும் சத்தம் கேட்கவே, பயத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் அங்குமிங்குமாக ஓடத் தொடங்கியது. பாதை மாறி வெகு தூரம் சென்றதில் வழி தெரியாமல் அழ ஆரம்பித்தது. அப்போது அங்கே வந்த அந்த குருவி குட்டி யானையிடம் பயப்படாதே, நான் உன்னை உன் பெற்றோருடன் சேர்த்து விடுகிறேன் என்று கூறி, வழிகாட்டியபடி பறக்கத் தொடங்கியது. குருவியை பின் தொடர்ந்த யானை தன் பெற்றோரைக் கண்டு மகிழ்ந்தது. தான் குருவியை திட்டிய போதிலும், அது தனக்கு உதவி செய்ததை நினைத்து குட்டி யானை மனம் வருந்தி அந்த குருவியிடம் மன்னிப்பு கேட்டது. பின்னர் இருவரும் சிறந்த நண்பர்களானார்கள்.
என்ன குட்டீஸ், உங்க கூட படிக்கிற friends, உங்க relatives கிட்ட நீங்க அன்பா, பாசமா நடந்துக்கிறீங்களா? இல்ல, என் bag ரொம்ப costly, என் pen புது model, நான் எல்லா colourயும் dress வைத்திருக்கிறேன் என்று சொல்லி உங்கள பத்தி பெருமையா பேசி மத்தவங்கள கேலி, கிண்டல் பண்றீங்களா? பெருமைப்படுவது ஆண்டவருக்கு பிடிக்காத காரியம். மற்றவர்களை அற்பமா நினைக்கிறதும் ஆண்டவருக்கு பிடிக்காது. இனி மேல் யாரையும் அற்பமாய் நினைக்காதீங்க. எல்லோரும் இயேசு கிறிஸ்துவோட சாயல் என்பதை உணர்ந்து அன்புடன் வாழுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
- Mrs. ஐடா கிங் டேவிட்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864