By Village Missionary Movement
Friday, 24-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 24.10.2025
பெற்றோரை கனம் பண்ணுவோம்
"...உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக" - யாத். 20:12
நான் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்களில், டீ கொண்டு வரும் ஒரு தம்பி எப்போதும் தன் பெற்றோரை குறித்து குறை கூறுவான். ஒரு முறை நான் அவனிடம், ஆண்டவருடைய பிள்ளைகள் ஒரு நாளும் தேவன் கொடுத்த பெற்றோரைக் குறித்து பிறரிடம் தவறாக பேசக்கூடாது, பெற்றோருக்காக ஆண்டவரிடம் நன்றி கூறு என்று கூறினேன். ஒரு வேளை அவர்கள் உன்னை கஷ்டப்படுத்தினாலும் ஆண்டவர் அவர்களை அன்புள்ளவர்களாக மாற்றுவார் என கூறினேன். எனினும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அந்த தம்பி ஒரு சில நாட்களுக்குள் தன் முடிவை தானே எடுத்துக் கொண்டதாக அறிந்து வேதனைப் பட்டேன். பெற்றோர் இல்லாத பல பிள்ளைகள் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். உண்ண உணவின்றி, படிப்பறிவின்றி, உடுத்த நல்ல உடையின்றி துன்புறுகின்றனர். ஆனால் அந்த தம்பிக்கு 35 வருடமாக பாதுகாப்பாக வளர்த்த தன் தாய் தந்தையை கனப்படுத்த தெரியவில்லையே என மனம் வருந்தினேன். நாம் பெற்றோரை சந்தோஷப்படுத்துகிறோமா? அல்லது அலட்சியம் செய்கிறோமா? "தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்" என்று (நீதி. 20:20) சொல்லுகிறது.
நோவாவின் பிள்ளைகளில் ஒருவன் தகப்பனின் குறைவை கண்டு மற்ற தன் சகோதரர்களுடன் கேலியாய் பேசுகிறான். அது ஆண்டவரின் பார்வைக்கு பாவமாய் காணப்பட்டது. தேவன் அவனை சபித்தார். ஆனால் நோவாவின் மற்ற மகனோ தகப்பனின் குறைவை மூடினான். அவனைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். நாமும் நம்முடைய பெற்றோரை தூஷிக்கக் கூடாது. அவர்களை கனம் பண்ண வேண்டும். பெற்றோர் உயிரோடு இருக்கும் போது சொத்துக்களை எழுதிக் கொடுக்கச் சொல்லி அவர்களை துன்புறுத்துகிற பிள்ளைகளாய் நாம் இருக்கக் கூடாது. (நீதி. 28:24) ல் "தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்" என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெற்றோர் நமக்கு உதவி செய்யாவிட்டாலும், கர்த்தர் நம்மை ஏற்ற வேளையிலே உயர்த்துவார். நம்பிக்கையுடன் இருப்போம். "என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்ளுவார்." (சங்கீதம் 27:10)
பிரியமான பிள்ளைகளே! ஆண்டவர் நமக்கு கொடுத்த 10 கட்டளைகளில் ஒரு கட்டளையோடு மாத்திரம் ஆசீர்வாதம் இணைந்துள்ளது. ஆம், பூமியிலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. ஆம், பெற்றோரை கனம்பண்ணி, பூமியில் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாய் வாழ வாழ்த்துகிறோம்.
- B.மல்லிகா சாராள்
ஜெபக்குறிப்பு:-
ஒரு கிராமத்திற்கு ஒரு முழு வேதாகமம் கொடுக்க, 50,000 வேதாகமங்கள் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864