By Village Missionary Movement
Thursday, 23-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 23.10.2025
நோபல் பரிசு
"...நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான்" - அப். 9:15
செய்தித்தாளை வாசித்த ஒருவர் அதில் தன்னுடைய மரணச் செய்தியை காண நேரிட்டது. தவறுதலாக வேறு ஒருவருக்கு பதிலாக அவருடைய பெயரும், புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. அவருடைய புகைப்படத்தின் கீழ் டைனமெட் உண்டாக்கிய இராஜா என்றும், மரணத்தின் வியாபாரி என்றும் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் அந்த மனிதர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. மரணத்தின் வியாபாரி என்றா என்னை மக்கள் நினைவு கூறுகிறார்கள் என்று அவரின் மனது திடுக்கிட்டது. அந்த நிகழ்வு அவருடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. தன்னை யாரும் அப்படி அழைப்பதை அவர் விரும்பவில்லை. அந்நாளில் இருந்து அவர் சமாதானத்திற்கான காரியங்களில் ஈடுபட ஆரம்பித்தார். அவர் தான் ஆல்பர்ட் நோபல் ஆவார். அவர் பேரில் இன்றும் ஒவ்வொரு வருடமும் சமாதானத்திற்கும், மற்ற அறிவியல் ஆராய்ச்சிகளை கண்டுபிடிப்பவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுலை நாம் அறிவோம். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்த ஸ்தேவானை கொலை செய்கிறதற்குச் சவுலாகிய பவுலும் சம்மதித்திருந்தார். இந்த சவுல் என்பவர் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய், கிறிஸ்தவர்களை கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி நிருபங்களை கேட்டு வாங்கினவர். இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்தவரை அன்றைய நாளில் அனனியாவைக் கொண்டு சந்திக்க கர்த்தர் சித்தங்கொண்டார். ஆனால் அனனியா பவுலைக்குறித்து சொல்லும் போது, "எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக் குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று. இப்படியாக மரணத்தை பிறப்பிக்கிற சவுலை கர்த்தர் சந்தித்து, அவனுடைய எல்லா சமாதானமற்ற சூழ்நிலைகளையும் மாற்றி கர்த்தர் தெரிந்து கொண்ட பாத்திரமாக மாறப் பண்ணினார்.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! நாம் ஆண்டவரை அறியாத நாட்களில் பாவம் செய்து இருப்போம். ஆண்டவரை விட்டு தூரமாய் வாழ்ந்திருப்போம். நாம் இயேசுவை ஏற்றுக்கொண்டு, சமாதானத்தோடு வாழ வேண்டும். ஆல்பர்ட் நோபல் தன்னுடைய வாழ்க்கையை நிதானித்து, செயல்பட்டது போல நாமும் நம்முடைய வாழ்க்கையை கல்வாரிக்கு நேராக திருப்புவோம். சவுலைப் போல கொலைகாரராக வாழாமல் பவுலைப் போல சபைகளையும், சீஷர்களையும் உருவாக்குவோம். இதன் மூலம் பரலோக ராஜ்யத்திற்குரிய நோபல் பரிசை பெற்றிட வாஞ்சிப்போம்.
- Mrs. சக்தி சங்கர்
ஜெபக்குறிப்பு:-
50,000 கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க தேவையான கைப்பிரதிகளுக்காக ஜெபியுங்கள்..
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864