By Village Missionary Movement
Monday, 13-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 13.10.2025
முதலாவது தேவனுக்கு கொடு
" ...இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்" - மாற்கு 12:44
வட இந்தியாவில் மலைப்பகுதியிலுள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசி குடும்பத்தை சந்தித்து, அவர்களுக்காக ஜெபித்துவர இரண்டு ஊழியக்காரர்கள் சென்றார்கள். ஊழியக்காரர்களை கண்ட அந்த குடும்பத்தினர் அவர்களை மிகுந்த அன்புடன் வரவேற்று, நன்கு உபசரித்தார்கள். அவர்களுக்கு வேதம் வாசித்து, ஜெபித்து, ஆண்டவரின் நல்வார்த்தைகளைக் கூறிவிட்டு புறப்பட்டார்கள்.
தங்கள் வீட்டிற்கு வந்த ஊழியக்காரர்களை வெறுங்கையாய் அனுப்ப மனதில்லாமல், அவ்வீட்டுப் பெண் தங்களின் அடுத்த வேளை உணவுக்காக வைக்கப்பட்ட சில ரொட்டித்துண்டுகளையும், பழங்களையும் கொண்டு வந்து அந்த ஊழியக்காரர்களின் கையிலே கொடுத்தார்கள். அந்த ஆகாரத்தைத் தவிர அவர்களிடம் சாப்பிட வேறு எதுவும் இல்லை என்பதை அறிந்த ஊழியக்காரர்கள் அதை வாங்க மறுத்தார்கள். ஆனாலும் அவர்களை வெறுமனே அனுப்புவது சரியல்ல என்று நினைத்த அந்த பெண், அதை வாங்காமல் அவர்களிடமே கொடுத்து விட்டார்கள். ஊழியக்காரர்கள் மிகுந்த பாரத்துடன் அந்த ஏழை ஆதிவாசி குடும்பத்தினருக்கு ஜெபித்து விட்டு திரும்பினார்கள்.
என்ன ஆச்சரியம்! மறுநாளே சில அரசாங்க அதிகாரிகள் அக்கிராமத்திற்கு வந்து, ஆதிவாசிகளுக்கென்று அரசால் ஒதுக்கப்பட்ட உதவித்தொகையை கொடுத்து விட்டு சென்றார்கள். கர்த்தர் அவர்களை கைவிடவில்லை. தேவனுக்கும், அவரது ஊழியர்களுக்கும் நம்மால் இயன்றதை கொடுத்தால் தேவன் நம் தேவைகளை பூர்த்தி செய்து நூறத்தனையாய் ஆசீர்வதிப்பார். கர்த்தர் தேவ பிள்ளைகளின் தியாகத்தையும், அவர்கள் ஊழியத்தின் மேல் கொண்டுள்ள வாஞ்சையையும், ஊழியக்காரர்களின் மேல் வைத்திருக்கும் அன்பையும் பார்க்கிறார்.
வேதத்திலே, ஆலயத்தில் காணிக்கைப் பெட்டியில் இரண்டு காசை காணிக்கையாக போட்ட அந்த ஏழை விதவையின் உள்ளத்தை ஆண்டவர் பார்த்தார். இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார். அவள் எவ்வளவு கொடுத்தாள் என்று அல்ல, எப்படிப்பட்ட நிலைமையிலிருந்து கொடுத்தாள் என்றே பார்த்தார். "சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது" (சங்.34:10).
ஆம், எனக்கன்பானவர்களே, உதாரத்துவமாய் தேவனுக்கு கொடுக்கும் பிள்ளைகளுக்கு அவர் மிகவும் வல்லமையான வாக்குத்தத்தங்களையும், மகிமையான பலன்களையும் வைத்துள்ளார். நம் இருதயங்களை ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவனின் ஊழியங்களையும், ஊழியர்களையும் கனப்படுத்தி மனப்பூர்வமான காணிக்கைகளை கொடுக்க தேவன் கிருபை செய்வாராக!
- Mrs.சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:-
மிஷனெரி பயிற்சி கட்டடத்திற்கான பணத் தேவைகள் சந்திக்கப்பட
ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864