By Village Missionary Movement
Friday, 03-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 03.10.2025
கொல்லும் பொறாமை
"படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்" - பிரசங்கி 10:8
சிலருக்கு மற்றவர்கள் நன்றாயிருப்பதைக் காணவே பிடிக்காது. பிறர் முன்னேறினால் அவர்களால் தாங்கவே முடியாது. இதைத்தான் பொறாமை என்கிறோம். பொறாமையினால் தன்னையே கொன்று கொண்ட ஒரு மனிதனின் கதை உண்டு. சுதனும், ஆனந்தும் விளையாட்டுகளில் கைதேர்ந்தவர்கள். இருவரும் போட்டா போட்டி போடுவார்கள். ஆனால் ஆனந்த் எப்போதுமே சுதனை தோற்கடித்து விடுவான். விளையாட்டுகளில் திறமையான ஆனந்திற்கு சிலை வடிக்க மக்கள் தீர்மானித்தனர். அப்படியே அவனுக்கு சிலை எழுப்பினர். சுதன் பொறாமையினால் துடித்தான். அந்த சிலையை தகர்த்து விடத் தீர்மானித்தான். ஒவ்வொரு நாளும் இருட்டின பின்பு புறப்பட்டு போய் சிலையின் அடித்தளத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்த்து சிலையை விழப்பண்ண முயற்சித்தான். இறுதியில் சிலை அவன் மேல் விழுந்ததில் அவன் செத்துப் போனான். அவனது பொறாமை அவனையே கொன்று விட்டது.
பரிசுத்த வேதத்தில் சவுல் என்ற ராஜாவிற்கு கோலியாத்தை வெற்றிப் பெற முடியவில்லை. தாவீது என்ற ஆடு மேய்க்கிற சிறுவனால் கோலியாத்து கொல்லப்படுகிறான். இதைக் கண்ட மக்கள் ஆடல் பாடலுடன், "சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்" என்று பாட்டுப் பாடினார்கள். உடனே சவுல் ராஜாவுக்கு பொறாமை வந்து தனக்காகவும், தன் மக்களுக்காகவும் வெற்றி தேடித் தந்த தாவீதை கொன்று விடத் துடித்தான். காரணம் பொறாமையே!
எனக்கருமையான தேவ மக்களே, உண்மையாக மற்றவர்களை நேசிப்பீர்களானால் அவர்கள் முன்னேறும்போது பொறாமைப்பட மாட்டீர்கள். அவர்களோடே சந்தோஷப்படுவீர்கள். இன்றைய நாட்களில் வியாபாரத்தில், தொழிலில், வேலை ஸ்தலத்தில், படிப்பில், விளையாட்டில் பொறாமை என்ற ஆமை அநேகரை கொன்று வருகிறது. இவ்வாறு ஒரு பழமொழி உண்டு, "ஆமை புகுந்த வீடு விளங்காது". அது போல் பொறாமையும் ஒரு கொடிய காரியமே!
ஆதலால் பிரியமுள்ள தேவ ஜனமே, பிசாசின் குணங்களில் ஒன்றுதான் பொறாமை. அது நமக்குள் வரவொட்டாமல் ஒவ்வொரு நாளும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரே வழி இயேசுவை உண்மையாக நேசிக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களை நாம் நேசிக்க முடியும். பொறாமை என்பது நம்மை கொன்று போடும் கருவி. அது நம்மிடம் ஒருக்காலும் இருக்கக் கூடாது. அல்லேலூயா! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
- Rev.S.A.இம்மானுவேல்
ஜெபக்குறிப்புகள்:-
நமது தோழமை ஊழியர்களை பணித்தளங்களில் தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864