By Village Missionary Movement
Tuesday, 30-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 30.09.2025
முடிவு நல்லது
"ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது;…" - பிரசங்கி 7:8
ராஜகோபால் என்பவர் தன் வாலிப வயது முதலே, 'தேவன் இல்லை' என்கிற மறுப்பு இயக்கத்தைச் சார்ந்தவர். அரசியலிலும் செல்வாக்குமிக்க அவர், ஒரு வசதி படைத்த விவசாயி. ஒரு நாள் அவரிடம் இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்லி ஒருவர் வேதாகமத்தை கொடுத்தார். அதை வாசிக்க ஆரம்பித்த அவர் இயேசுவையும், பரம ராஜ்யத்தையும் குறித்து அறிந்து கொண்டார். சில சமயம் வேதத்தில் கூட கேள்விகளையும் அவர் எழுப்புவது உண்டு. தனது 80 ஆவது வயதில் வியாதிப்பட்டபோது ஒரு ஊழியக்காரர் அவரைப் பார்க்க வந்தார். அவரும் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு எழுந்து உட்கார்ந்து அவரிடம் ஐயா, நான் மரிக்கப் போகிறேன். நான் இந்த கிராமத்தில் கெம்பீரமாக வாழ்ந்து விட்டேன். என்னிடம் யாராவது கடவுளின் பணிக்கென்று பணம் கேட்டால், ஊழியத்திற்கு விரோதமாய் பேசுவேன். இப்போது நீங்கள் எனக்காக இயேசுவிடம் ஜெபம் பண்ண வேண்டும். நான் படுத்த படுக்கையாகிவிடாமல் இயேசுவிடம் செல்லணும் என்று தன் பாவங்களை சிறுப்பிள்ளையைப் போல அறிக்கையிட்டு ஜெபித்தார். ஒரு சில நாட்களில் இரட்சிக்கப்பட்டவராகவே தேவ ராஜ்யம் சென்றடைந்தார்.
இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களில் ஒருவன் சிலு வையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தான். இயேசு பிதாவிடம் ஜெபிக்கிறது, மற்றவர்களை மன்னிக்கிறது இதையெல்லாம் கவனித்த ஒரு கள்ளன் தூஷித்த கள்ளனை கடிந்து கொண்டான். இயேசுவிடம் இயேசுவே, உம்முடைய ராஜ்யத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும் என்று சொல்கிறான். இயேசுவும் 'இன்றைக்கு நீ என்னுடனே பிரதீசிலிருப்பாய்' எனறார். திருடனாக வாழ்ந்த ஒருவன் தன் வாழ்வின் இறுதி நேரத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பரதீசு சென்றுவிட்டான்.
இன்று நாம் எப்படி இருக்கிறோம்? நம் துவக்கம் அற்பமாயிருந்தாலும் நம் முடிவு சம்பூரணமாயிருக்க வேண்டும். நாம் நம்முடைய ஓட்டத்தை முடிக்கும் போது இயேசுவோடு அவருடைய ராஜ்யத்திற்கு செல்ல வேண்டும். நம்முடைய செல்வமோ, பணமோ நம்மை பரம ராஜ்யத்திற்கு கொண்டு செல்ல முடியாது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டு, மனந்திரும்பினால் மட்டுமே பரலோகத்தை சென்றடைய முடியும். பரலோகம் செல்ல ஒரே வழியும் அதுவே. சோதனைகள் மற்றும் துன்பத்தின் மத்தியிலும் தேவனுடைய கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். ஆதலால் நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை இறுதிவரை உறுதியாய் பற்றிக்கொள்ள வேண்டும். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
ஜெபக்குறிப்பு:-
50 ஆயிரம் கிராமங்களுக்கு சுவிசேஷம் என்ற திட்டத்தை அடைய, அதை ஜெபத்தில் தாங்கும் ஜெபக் குழுக்கள் எழும்ப ஜெபியுங்கள். .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864