By Village Missionary Movement
Sunday, 28-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 28.09.2025
தாழ்வு மனப்பான்மை வேண்டாம்
"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்" - பிலிப்பியர் 4:4
அழகிய பழ மரங்கள், சுவைமிக்க கனிகள், எங்கும் குருவிகள் பாடும் சத்தம். இந்த அழகிய தோட்டத்திற்குள் உங்களை விட்டால் எப்படி இருக்கும்? பழங்களை சாப்பிட்டுக் கொண்டும், மரங்களை ரசித்துக் கொண்டும் ஜாலியாக இருப்பீர்கள் அல்லவா? இவ்வளவு பழ மரங்களையும் ரசிக்கிற நீங்கள் என்றைக்காவது முட்செடியை ரசித்ததுண்டா? யாருமே ரசிப்பதில்லை. அப்படித்தானே!
முன்னொரு காலத்தில் வனாந்தரத்தில் ஒரு முட்செடி இருந்தது. அந்த செடி தன்னை சுற்றிலும் பார்த்து மனம் புழுங்கியது. ச்சே என்னைவிட மோசம் யாருமே கிடையாது. மேலே பார்த்தால் சூரியக் கதிர்கள், அக்கினி அம்புகள் போல பாய்கிறது. நான்கு பக்கங்களிலிருந்தும் வெப்பக்காற்று, கொஞ்ச தூரம் சென்றால் ஏதோ அரைகுறையான முட்புதர்கள், இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி சென்றால் ஆடுகள் மேய்வதற்கு ஏதோ கொஞ்சம் இலைதழைகள். ச்சே ஏன் எனக்கு மட்டும் இப்படி அற்பமான வாழ்க்கையோ என்று சொல்லி பெருமூச்சு விட்டது. நான் மட்டும் ஒரு ராஜாவின் வீட்டில் அழகான ரோஜா செடியாகவோ, திராட்சை செடியாகவோ வளர்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும். மனிதர்களை மயக்குகிற திராட்சை பழங்களையும், திராட்சை ரசத்தையும் கொடுத்திருப்பேன். தோட்டக்காரன் என்னை பார்த்து பார்த்து வளர்த்திருப்பான். ச்சே போயும் போயும் ஒரு முட்செடியாக வளர்ந்து விட்டேனே, என் கிளைகளில் ஒரு குருவி கூட கூடு கட்ட மாட்டேன் என்கிறதே என்று புலம்பியது.
இந்த நேரத்தில் தான் மோசே அண்ணன் தன் மாமாவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டு அந்த வனாந்தரத்திற்கு வந்தார். அங்கு பார்த்தால் ஒரு முட்செடி எரிந்து கொண்டிருந்தது. மோசே அண்ணாவுக்கு ஆச்சரியம், என்னடா யாருமே இல்லாத காட்டில் எப்படி முட்செடி தீப்பற்றி எரிகிறது. கிட்டப்போய் பார்ப்போம் என்று நினைத்து பக்கத்தில் போய் பார்த்தால் தேவன் அந்த முட்செடியில் தோன்றி மோசேயோடு பேசினார். போயும் போயும் ஒரு முட்செடி என்று தன்னை நொந்து கொண்ட அந்த முட்செடியிலிருந்துதான் இஸ்ரவேலரின் விடுதலைக்கான கட்டளை பிறந்தது.
தம்பி, தங்கச்சி நீயும் கூட நான் சாதாரணமானவன், ஒன்றுக்கும் உதவாதவன், அழகில்லாதவன், ஞானமற்றவன், நான் ஒரு ஏழை, நான் மட்டும் ஒரு பணக்கார வீட்டில் பிறந்திருந்தால் எப்படி வளர்ந்திருப்பேன். எவ்வளவு நன்றாக இருந்திருப்பேன் என்று புலம்புகிறாயா? ஒருவேளை நீ அவளைப்போல இருந்தால் நன்றாக இருக்குமே, இவனைப்போல இருந்தால் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாமே என்று எண்ணுகிறாயோ? ஒருவேளை மற்றவர்களின் நினைவை பார்க்கும் ஒரு கருவியிருந்தால் அவனும் உன்னைப் போலவே தன்னுள்ளத்தில் திருப்தியடையாமல் இருப்பதைக் காணலாம். ஆகவே இயேசு கிறிஸ்துவோடு எந்த நிலையிலிருந்தாலும் சந்தோஷமாய் வாழக் கற்றுக் கொள். o.k வா.
- Mrs. ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864