By Village Missionary Movement
Friday, 19-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 19.09.2025
அர்ப்பணிப்பு
"...நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய்..." - வெளி. 2:4
1873 ம் ஆண்டு மொலாக்காய் ஒரு தீவில் துன்பத்தில் துவண்டு தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணைவனாக அம்மக்களைத் தேடி புறப்பட்டான் ஒரு இளைஞன். அவர் தான் ஜோசப் டாமியன் (Damien). பலர் அவரை அங்கு செல்ல வேண்டாம் என தடுத்தனர். ஆனால் டாமியனோ தான் எடுத்த தன்னுடைய தீர்மானத்திலும், அர்ப்பணிப்பிலும் உறுதியாய் இருந்தார். அங்குள்ள ஜனங்களுக்கு பல மருத்துவ உதவிகளைச் செய்தார். ஒருநாள் அவர் மீது தற்செயலாக கொதிக்கும் தண்ணீர் பட்டது. அப்போது தான் தன் கைகளில் உணர்ச்சி இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். ஆம், அவரும் தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த டாமியன், அத்தீவு மக்களிடம் நான் இப்போது உங்களில் ஒருவனாகி விட்டேன் என்று கூறினார். அந்த வாரம் ஞாயிறு ஆராதனையில், "தொழு நோயாளிகளாகிய நம்மேல் தேவன் அன்பாயிருக்கிறார்" என்று ஆண்டவரை புகழ்ந்தார். நோயின் கொடூரம் அவரை முற்றிலும் தாக்கவே, தான் அளவு கடந்த அன்பு வைத்த அம் மக்களை விட்டு விட்டு தனது 49 ஆவது வயதில் மரித்தார். தனது அர்ப்பணிப்பில் இருந்து பின்வாங்காமல் தன் உயிரையே தொழு நோயாளிகளுக்காக கொடுத்த அந்த வாலிபன் டாமியனின் அர்ப்பணிப்பு நிச்சயமாகவே மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துகாட்டாகும்.
சவுலின் குமாரனாகிய யோனத்தானுக்கு ஆயுததாரியாக அர்ப்பணிப்புள்ள ஒரு வாலிபன் இருந்தார். அந்த ஆயுததாரியின் பெயர் வேதத்தில் எழுதப்படவில்லை. அந்த ஆயுததாரியைப்பற்றி வேறே எந்த புத்தகத்திலும் குறிப்பிடப்படவுமில்லை. ஆனாலும் அந்த வாலிபனாகிய ஆயுததாரியின் அர்ப்பணிப்பு மிகவும் போற்றப்படத்தக்கது. யோனத்தான், ராஜாவின் மகன், அவருக்கென்று படைபலம் உண்டு. ஆனால் ஆயுததாரிக்கு எந்த விதமான புயபலமும் கிடையாது. ஆயுததாரி யோனத்தானிடம் உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும். அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடே கூட வருகிறேன் என்றான். அதை போலவே யோனத்தான் பின்சென்று ஆயுததாரி வெற்றியை பெற்று தருகிறான். ஆயுததாரி தன்னுடைய அர்ப்பணிப்பிலிருந்து பின் வாங்கவே இல்லை.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! நம்முடைய வாழ்க்கையில் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானது. இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவருடைய அன்பை ருசிபார்த்த அந்த நாட்களில் நம்முடைய அர்ப்பணிப்பு எப்படியாக இருந்தது? அவருடன் நாம் செலவழித்த ஜெப நேரம், வேத வாசிப்பு, அவருக்காக எதையாவது செய்வது, இயேசுவை மற்றவர்களுக்கு அறிவித்தது என நம்மையே முற்றிலும் அர்ப்பணித்து இருந்தோம் அல்லவா?ஆனால் நாட்களும், வருடங்களும் கடந்து செல்லவே, இன்று நாம் எப்படி இருக்கிறோம்? அவருடன் ஆதியில் நாம் கொண்டிருந்த அன்பை விட்டு விட்டோமோ? யோசித்துப் பார்ப்போம். நம்மை நாமே ஆராய்ந்து, சரிசெய்து நம்முடைய அர்ப்பணிப்பை செப்பனிட்டு மீண்டும் ஒரு விசையாய் நம்முடைய அர்ப்பணிப்பை புதிதாக்குவோமா?
- Mrs. சக்தி சங்கர்
ஜெபக்குறிப்பு:-
50 ஆயிரம் கிராமங்களுக்கு சுவிசேஷம் என்ற திட்டத்தின் மூலம் ஒருகோடி ஆத்துமாக்கள் சந்திக்கப்பட ஜெபியுங்கள். .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864