By Village Missionary Movement
Thursday, 18-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 18.09.2025
நமது கடமை
"...அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்" - 2 தீமோ. 1:5
ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க தேர்வு ஒன்றை நடத்தினார். அதில் வெற்றி பெறும் மாணவிக்கு ஒரு புதிய ஜோடி காலணி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அனைத்து மாணவிகளும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்வை எழுதினர். இறுதியில் ஆசிரியை அவர்களது விடைத்தாள்களை திருத்தின போது, அவர்கள் அனைவரும் சரியான விடைகளை எழுதியிருந்தனர். ஆசிரியையோ யாருக்கு அந்தப் பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு, மாணவிகள் அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி ஒரு பெட்டியில் சுருட்டிப் போடுமாறு கூறினார். அனைவரும் அவ்வாறு எழுதிப்போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதிலிருந்து ஒரு தாளை எடுத்தார். அதில் 'வஃபா' என்ற மாணவியின் பெயர் இருந்தது. உடனே அம்மாணவிக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது.
அந்த மாணவி தான் அந்த வகுப்பிலேயே மிகவும் ஏழ்மையான மாணவி, பல மாதங்களாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம்மாணவிக்கோ அன்று எல்லையில்லா மகிழ்ச்சி. பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து, அன்று வகுப்பறையில் நிகழ்ந்தவற்றை தனது கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவரும் மகிழ்ச்சி அடைந்தார். எனினும் தொடர்ந்து அவர் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டேயிருந்தது. கணவர் அவரிடம் காரணத்தைக் கேட்க, "நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியில் இருந்த தாள்களை எல்லாம் பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல், வகுப்பில் ஏழை மாணவியாக இருந்த 'வஃபா' வின் பெயரையே எழுதியிருந்தனர், என்று கண்ணீருடன் கூறினார்.
வேதத்திலே, தீமோத்தேயுவைக் குறித்து நாம் அறிவோம். அவர் இன்றும் பேசப்படும் ஊழியக்காரராக உருவாவதற்கு காரணம் அவரது பாட்டியாகிய லோவிசாள் மற்றும் தாயாகிய ஐனிக்கேயாளுந்தான். இவர்களுடைய விசுவாசம் தீமோத்தேயுவை பெரிய ஊழியக்காரனாக மாற்றிற்று. அவர், அப்போஸ்தலனாகிய பவுலுக்கு எல்லா விதத்திலும் உதவியாய் இருந்தார். தன்னலம் இல்லாத பிள்ளையாக அவர் வளர்க்கப்பட்டார்.
அன்பானவர்களே! இன்றைய கால கட்டத்தில் பிள்ளை வளர்ப்பு என்பது மிகவும் கஷ்டமான காரியம். அதிலும் கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ப்பது என்பது ஒரு சவாலாகவே இருக்கிறது. அவ்வளவு கடினமான காரியத்தை நம் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க கற்றுக்கொடுக்க வேண்டும். நம் உதவி தேவைப்படுவோர் மீது அக்கறை கொண்டு, அவர்களுக்கு உதவும் பிள்ளையாக நமது பிள்ளைகளை வளர்ப்பது நமது கடமையாகும்.
- Bro. சங்கர் ராஜ்
ஜெபக்குறிப்பு:-
வட மாநில மிஷனெரிகளை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864