By Village Missionary Movement
Wednesday, 17-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 17.09.2025
படிப்படியான வீழ்ச்சி
"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” - நீதி. 28:13
லூக்கா 15ம் அதிகாரத்தில் இளைய குமாரனுடைய வீழ்ச்சியைக் குறித்து நாம் வாசிக்கிறோம். அவனது வீழ்ச்சி படிப்படியாக சுயவிருப்பம், பிரிவு, அழிவு, தாழ்வு, பட்டினி என்று இருந்தது. ஏவாளின் நிலையும் கூட அப்படிப்பட்டதாகவே இருந்தது. ஏவாள் சர்ப்பத்தின் வார்த்தைக்குச் செவிகொடுத்தாள். கனியை இச்சையுடன் பார்த்தாள், பறித்தாள், உண்டாள்; மேலும் தன் கணவருக்கும் கொடுத்தாள். தேவகட்டளையை மீறினாள் என்று பார்க்கிறோம். (ஆதி. 3:1-6)
லோத்தின் வாழ்க்கையைக் குறித்து நாம் காணும்போது அவருடைய பார்வை சோதோமை நோக்கியதாக இருந்தது. பின் அதைத் தெரிந்து கொண்டான். பிரயாணப்பட்டு போனான். பின் வீடுகட்டி அதில் நிரந்தரமாக குடியிருந்தான். இளைய குமாரன், ஏவாள், லோத்து இவர்களின் வாழ்வில் வீழ்ச்சி என்பது உடனடியாக இல்லாமல் படிப்படியாகவே காணப்பட்டது.
முதல் சங்கீதம் முதலாவது வசனத்தில் நாம் எப்படி நடக்கக்கூடாது, யாருடன் நிற்கக் கூடாது, எங்கு உட்காரக்கூடாது எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான சூழ்நிலைகளில் பாவம் நம்மை படிப்படியாகக் கீழே கொண்டுவந்து அதில் சிக்கும்படி செய்து விடுகின்றது. நமது கண்கள் காணும் காட்சி நம்முடைய சிந்தையில் பதிந்து தொடர்ந்து அதைப் பற்றி சிந்திக்கும் போது நாம் அதைச் செயல்படுத்துகிறவர்களாக, அதை நிறைவேற்றுபவர்களாக மாறி விடுகிறோம். எனவே நம்முடைய முதல் அடியை சரியாக வைக்க வேண்டும். பாவத்தைக் குறித்து எச்சரிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். நமது சிந்தனைகள், பார்வைகள், செயல்கள் அனைத்தும் தேவனுடைய ஆளுகைக்குள் இருக்க வேண்டும்.
பிரியமானவர்களே, பிசாசு நம்மை ஒரு பாவத்தில் படிப்படியாய் விழ வைக்கும் தந்திரத்தை நேர்த்தியாய் செய்வான். ஒரு கிறிஸ்தவனுக்கு வீழ்ச்சி என்பது ஒரே நாளில் வருவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் அந்தக் காரியம் தன்னை இழக்க ஒப்புக்கொடுக்கும் போது, ஒருநாள் அது பெரிய வீழ்ச்சிக்கு நேராய் நம்மை நடத்துகிறது. ஆகவே தேவனுக்குப் பிரியமில்லாத காரியம் என்பதை அறிந்தும், உணர்வற்றவர்களாய் அதே நிலையில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்போமானால் நம் நிலைமை பரிதாபமானதாகிவிடும். இன்றே விட முடியாத பாவகாரியங்களை தேவனிடம் அறிக்கை செய்து அவைகளை விட்டுவிட நாம் தீர்மானித்து, தேவனிடம் மன்றாடுவோம். தேவனிடத்திலிருந்து இரக்கத்தைப் பெற்றுக் கொள்வோம். ஆமென்.
- Mrs. ஜெபக்கனி சேகர்
ஜெபக்குறிப்பு:-
வட மாநிலங்களில் பணி செய்யும் நம் ஊழியர்களின் சுகத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864