By Village Missionary Movement
Wednesday, 02-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 02-06-2021
தகுதியான தலைமை
“அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்;…” – தானியேல் 2:21
ஒரு நாட்டின் மன்னர் நாட்டைத் திறம்பட ஆண்டு, தன் குடிமக்களை மகிழ்ச்சியுடன் செழிப்பாக வாழச் செய்து கொண்டிருந்தார். மன்னருக்கு வயது மூப்பு வர ஆரம்பித்தது. அவருடைய இரு மனைவிகளுக்கும் ஒவ்வொரு மகனாக இரண்டு மகன்கள் இருந்தனர். இரு மனைவியரும் தன் மகன்தான் அரசனாக வேண்டுமென்று போராடினர். “எனக்குப் பின்னும் மக்களுக்கு நல்லாட்சி தருபவனே தகுதியானவன். நான் ஒரு தேர்வு வைத்து அதனடிப்படையில் தேர்வு செய்வேன்” என்றான் மன்னன்.
நாட்டிலிருந்து 10 கி.மீக்கு அப்பால் தனித்தனியாக இரண்டு தீவுகள் உண்டு. சில மாதங்களுக்கு தேவையான மக்காச்சோளத்துடன் இரு மகன்களை தீவுகளில் விடச்செய்தார். படகு இல்லாமல் அங்கிருந்து வரவும் முடியாது. அங்கு ஓங்கி உயர்ந்த மரங்களும் புதர்ச்செடிகளும் காணப்பட்டது. “மக்காச்சோளம் தீர்ந்த பிறகு, இங்குள்ள புதர்ச்செடிகளை வெட்டி, அக்குவியலுக்குத் தீ வைக்க வேண்டும். அந்த நெருப்பு புகையை பார்த்தவுடன் காவலர்கள் உங்களை அழைத்து வருவார்கள்.” எனக் கூறினார் மன்னர். மூன்று மாதங்களில் ஒரு தீவிலிருந்து நெருப்புடன் கூடிய புகை வந்தது. ஆனால் மற்ற தீவிலிருந்து பல மாதங்களாகியும் புகை வரவில்லை. பதறிப்போன அரசர் தம் பாதுகாவலருடன் சென்று பார்த்தபோது மக்காச்சோளம் பெருங்குவியலாக வளர்ந்திருந்தது. அனுதினமும் புதர்களை வெட்டி சுத்தம் செய்த இடத்தில், தனக்கு உணவாகக் கொடுக்கப்பட்ட மக்காச்சோளத்தின் ஒரு பகுதியை பயிரிட்டிருந்தான். நல்ல விளைச்சலோடு இடமும் செவ்வையாக்கப்பட்டிருந்தது. இவன் தான் நம் நாட்டிற்கு தகுதியான மன்னன் என அரியணையில் அமர்த்தினார். ஆம், மக்களை ஆளும் மன்னனுக்கு சமயோர்ஜிதமும், ஞானமும் மிக அவசியம்!
நமது தமிழக சட்டசபைத் தேர்தலில், தேவன் நமக்கு புதிய முதலமைச்சரை தந்துள்ளார். மிகுந்த சவாலான இந்த கொரோனா காலக்கட்டத்தில் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளார். எதிர்க்கட்சிகளுடன் சுமுகமான உறவு! நேர்மையாக, கடுமையாக உழைக்கக்கூடியவர்களை அதிகாரிகளாக தெரிவு செய்தது! வாக்குக் கொடுத்த திட்டங்களை அமல்படுத்தியது! என அவரது மக்கள் நலத் திட்டங்கள் நம்மை மகிழச் செய்துள்ளது. நாடு நலமுடன் இருக்க நமது கடமையையும் நாம் செய்ய வேண்டும். ஆட்சியாளர்கள் ஞானத்துடன் செயல்பட்டு, பெருந்தொற்றை ஒழித்து, ஊழலற்ற நல்லாட்சி செய்து, சட்ட ஒழுங்கு சிறப்புடன் செயல்பட ஜெபிப்போம். எல்லாத் துறை அதிகாரிகளுக்காகவும், அமைச்சர்களுக்காகவும் கருத்துடன் ஜெபிப்போம். கொரோனா ஒழிந்து, மக்கள் நலமுடன் வாழ அரசுக்கு துணைநிற்போம். ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்திற்குள் வந்து தினமும் மதிய உணவு பெற்றுச் செல்லும் நபர்கள் இயேசுவின் அன்பை அறிந்துகொள்ள ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250