By Village Missionary Movement
Thursday, 11-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 11.09.2025
வேதத்தின் மகத்துவம்
"உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்" - சங்கீதம் 119:101
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இல்லைவாதியான இங்கர்சால் என்ற நாத்திகனும், அவன் நண்பர்களும் கிழக்கத்திய நாடுகளை சுற்றிப் பார்க்க பயணம் மேற்கொண்டிருந்தார்கள். அநேக நாடுகளின் தீவுகளை சுற்றிப் பார்த்தார்கள். ஒரு சிறிய தீவிலுள்ள மரத்தின் கீழ் ஒரு வாலிபன் வேத புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். அவனருகே சென்ற இங்கர்சால், ஏன் தம்பி கட்டுக்கதைகள் நிறைந்த, ஒன்றுக்கும் உதவாத பழங்கால புத்தகத்தை படிக்கிறாய்? அதை தூக்கி எறி. நான் கொடுக்கும் இந்த விஞ்ஞான புத்தகத்தை படி. உன் அறிவும் வளரும், உன் வாழ்வுக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்றார். அந்த வாலிபன், இங்கர்சாலை ஏற இறங்க பார்த்துவிட்டு, இந்த வேத புத்தகத்தை தூக்கி எறிய சொல்கிறீர்கள். இப்புத்தகம் எங்களிடம் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் நாங்கள் உங்கள் அனைவரையும் கொன்று, வேகவைத்து சாப்பிட்டிருப்போம் என்றானாம். நரமாமிச மனிதர்களை நாகரீகமாக மாற்றியது வேதம்.
பாவம், அக்கிரமம், மீறுதல்கள் போன்ற அநியாயங்களில் அடிமைப்படுத்தப்பட்ட மனிதனை மாற்ற வல்லது வேத வார்த்தை. தேவன் நமக்கு அருளியிருக்கிற பெரிய ஈவுகளில் ஒன்று வேதம். பண்டைய உலகம் விபச்சாரம், வேசித்தனம், ஜாதி வேறுபாடுகள், கொலை, கொள்ளை நிறைந்ததாக இருந்தது. கிறிஸ்தவ மார்க்கம், அதாவது வேதத்தை கையில் ஏந்தி சென்ற விலையேறப்பெற்ற மிஷனெரிகளால் உலகம் நாகரீகமாக மாறியது என்பதை எல்லா சரித்திர ஆசிரியர்களும் ஒத்துக்கொள்ளும் ஒரு உண்மை. பாவ இருளிலிருந்த ஜனங்கள் வேதத்தை வாசித்ததின் மூலம் இயேசு கிறிஸ்து என்ற மெய்யான ஒளியை கண்டு இரட்சிப்படைந்தார்கள்.
வேதத்தின் கருத்துக்கள் ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளன. உலகை மாற்றின உன்னத புத்தகம் வேதம். வேதத்தை நேசித்து வாசிப்பவர்கள் பரிசுத்த வாழ்வு வாழ முடியும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும், அனுதினமும் தேவனுடைய வார்த்தையாகிய வேதத்தை விசுவாசத்துடனும், வாஞ்சையுடனும் வாசித்து, நம்மை சுத்திகரித்து வாழ தேவன் அழைக்கிறார். ஆம், வேதம் நம் வாழ்வை மாற்றும், நம் கால்களுக்கு தீபமாய், பாதைக்கு வெளிச்சமாய் நம்மை சரியான பாதையில் நடத்திச் செல்லும். வேதத்தின் மகத்துவங்களை நாம் அறிந்து கொண்டால் நம்மால் வேதத்தை வாசிக்காமல் இருக்க முடியாது.
எனக்கன்பானவர்களே, பாவ இருளிலிருந்த உங்களையும், என்னையும் மீட்டெடுத்த இயேசு ராஜாவின் வார்த்தைகள் அடங்கிய வேதத்தை நேசித்து, வாசித்து, சுவாசித்து தியானிப்போமா?
"உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்" (சங்கீதம் 119:140)
- Mrs.சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:-
நம் டியூஷன் சென்டரில் படிக்கும் பிள்ளைகள் இயேசுவை ஏற்றுக்கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864