By Village Missionary Movement
Tuesday, 09-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 09.09.2025
சகலமும் செய்ய வல்லவர்
"தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது..." - யோபு 42:2
வேதாகமம், பல இடங்களில் கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர் என்பதையும், அவர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதையும் நமக்கு போதிக்கிறது. ஈசாக்கின் பிறப்பை தேவன் அறிவித்தபோது, சாராள் நகைத்த உடன், கர்த்தரால் ஆகாத காரியம் ஒன்று உண்டோ? என்று ஆபிரகாமிடம் தேவன் கேட்கிறார். யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று சீஷர்கள் கேட்டபோது, "மனுஷனால் கூடாதது தேவனால் கூடும்" என்று இயேசு பதிலளிக்கிறார். இயேசுவின் அதிசயமான பிறப்பையும், மலடி எனப்பட்ட எலிசபெத்திற்கு முதிர் வயதில் யோவான் ஸ்நானகன் பிறக்கப் போவதையும் அறிவித்த காபிரியேல் தூதன், தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று மரியாளிடம் கூறுகிறார். பகைவர்களால் பாழாக்கப்பட்டு வெறிச்சோடியிருந்த எருசலேம் வீதிகள், மறுபடியும் எல்லா வயதினராலும் நிரப்பப்படும் என்று சகரியா தீர்க்கதரிசியிடம் தேவன் அறிவித்த போது, "இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ" என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
வாழ்க்கையில் நம்பிக்கையற்று சோர்ந்து போய் முடங்கிக் கிடப்போரின் இடிந்து போன வாழ்வை மீண்டும் கட்டி எழுப்பி, மகிழ்ச்சிப்படுத்துவது கர்த்தருக்கு ஆச்சரியமானது அல்ல. அனாதையான எஸ்தரை ராணி ஆக்கியது கர்த்தருக்கு ஆச்சரியமானது அல்ல. தேவ சித்தத்திற்கு நம் காரியங்களை பரிபூரணமாக ஒப்புக் கொடுக்கும் போது, கர்த்தருக்கு சித்தமானது அவர் கையினால் நமக்கு வாய்க்கும். அது நமக்கு ஆசீர்வாதமாகவும், நம் கண்களுக்கு ஆச்சரியமாகவும் இருக்கும். ஆபிரகாமை போன்று, தேவன் வாக்குத்தத்தம் பண்ணியதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பும் போது, தேவன் நம் வாழ்விலும் அவர் செய்ய நினைத்தது தவறாமல் நிறைவேறும்.
பிரியமானவர்களே! நீங்களும் எல்லோராலும் அற்பமாக எண்ணப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட நிலைமையில் காணப்படுகிறீர்களா? தாவீதை உயர்த்தின தேவன், யோசேப்பை உயர்த்தின தேவன் இதை வாசிக்கிற ஒவ்வொருவரையும் உயர்த்த வல்லவராயிருக்கிறார். அவராலே எல்லாம் ஆகும். ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் நம் வாழ்வில் செய்ய அவர் வல்லவராயிருக்கிறார். எனவே, நாம் தேவனிடம், "தேவனே நீர் சகலமும் செய்ய வல்லவர். என்னுடைய வாழ்வில் நீர் செய்ய நினைத்தது தடைபடாது" என அறிக்கை செய்வோம். தேவ வார்த்தைகளை விசுவாசித்து, நம் காரியங்களை அவரிடம் ஒப்புவித்து ஆசீர்வாதம் பெறுவோமாக.
- Mrs.கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:-
மாவட்டங்கள் தோறும் ஆரம்பிக்கப்பட்ட டியூஷன் சென்டருக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864