By Village Missionary Movement
Monday, 08-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 08.09.2025
தொடாதே
"...உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்" - சகரியா 2:8
ஆண்டவர் நம்மைப் பற்றி மிகுந்த கரிசனையுள்ளவராய் இருக்கிறார். நாம் கர்த்தரோடு நடக்கிறவர்களாக இருந்தால் சத்துருவின் எந்த வல்லமையும் நம்மைத் தொட முடியாது. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, மெய்யாய் தேவனோடு நடக்கிற பிள்ளைகள் எப்பொழுதும் பரலோக பாதுகாப்பில் இருக்கிறோம். மேலும் ஆண்டவரின் அரவணைப்பில், பரிசுத்த தூதர்களின் பாதுகாப்போடு இருக்கிறோம்.
ஆபிரகாமின் மனைவியாகிய சாராளை தொட நினைத்த ஒரு அரசனை ஆண்டவர் எச்சரிக்கிறார். "நீ அவளைத் தொட நான் உனக்கு இடம் கொடுக்கவில்லை என்றார்" (ஆதி.20:6). அப்படியே யாக்கோபுக்கு பொல்லாப்பு செய்ய நினைத்த லாபானை ஆண்டவர் எச்சரிக்கிறார். "உங்களுக்கு பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று ராத்திரி என்னோடே சொன்னார்". (ஆதி. 31:29) என்று லாபான் யாக்கோபிடம் கூறுகிறார். ரூத் புத்தகத்தில் போவாஸ், ரூத் அந்நிய தேசத்துப் பெண்ணாக இருந்தாலும், தன் வயலில் கதிர் பொறுக்க வந்த ஏழை பெண்ணாக இருப்பினும், அவளைத் தொட யாருக்கும் இடம் கொடுக்கவில்லை. "ஒருவரும் உன்னைத் தொடாத படிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்"(ரூத் 2:9). ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பில் "ஒருவரும் உன்னைத் தொடக்கூடாது என்று நான் ஏற்கனவே வாலிபருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்" என்று உள்ளது.
ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் யாவரும் அவருடைய கரத்தில் இருக்கிறோம். ஆண்டவர் நம்மை அந்த அளவிற்கு சிநேகிக்கிறார். எனவே தான் யோவான் 3 :16 ல், நாம் ஒருவர் கூட கெட்டுப்போவது அவரின் சித்தமல்ல என்பதாலும், நாம் அனைவரும் அவருடன் பரலோக ராஜ்யத்தில் நித்திய ஜீவனை பெறும்படியாகவும், தன் ஒரே பேறான குமாரனை நமக்காக தந்தருளி, நம்மில் அன்பு கூர்ந்தார் என்று கூறுகிறார். "நான் அபிஷேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்". (சங்கீதம் 105:15). நாமும் கர்த்தராகிய இயேசுவுக்கே சொந்தம். ஆகையால் நம்மை ஒருவரும் தொடக்கூடாது என்று அவர் கட்டளையிட்டிருக்கிறார். நமக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதத்தையும் வாய்க்காமல் போகச் செய்ய தேவன் வல்லவராயிருக்கிறார். நம்மை கண்மணியைப் போல பாதுகாத்து தம்முடைய கரங்களில் நம்மை மூடி மறைப்பார். ஆகவே எதைக் குறித்தும் கலங்காதீர். காக்கும் தேவன் நமக்கிருக்க வீண் கவலை நமக்கெதற்கு?
- Rev.எலிசபெத்
ஜெபக்குறிப்பு:-
50 ஆயிரம் கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க தேவன் நம் ஊழியர்களை வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864