By Village Missionary Movement
Wednesday, 03-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 03.09.2025
தேவன் பலன் அளிக்கிறவர்
"...நான் (அதோனிபேசேக்) எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான்..." - நியா. 1:7
பக்தியான, ஐசுவரியமுள்ள ஒரு வயதான தாயார் ஒரு நாள் ஒரு சொப்பனம் கண்டு விழித்துக்கொண்டார்கள். அந்த சொப்பனத்தின் மூலம் அவர்கள் அறிந்து கொண்டதை கைப்பிரதி மூலம் அச்சிட்டு அநேகருக்கு கொடுத்தார்கள். அவர்கள் கண்ட கனவு என்னவென்றால் அவர்கள் மரித்தவுடன் ஒரு தேவ தூதன் அவர்களை பரலோகத்திற்கு அழைத்துச்சென்று ஒரு சிறிய வீட்டை காண்பித்து, இது தேவன் உங்களுக்கு கொடுத்த பலன் என்றாராம். ஆனால் அவர்கள் வீட்டிற்கு எதிரில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய வீட்டில் அவர்களுக்கு அறிமுகமான ஒரு தாய் இருந்தார்கள். அந்த தாயார் பூமியில் ஒரு சிறிய வீட்டில் வசித்தவர்கள் தான். ஆனால், இவ்வளவு பிரமாண்டமான வீடு கிடைக்க அவர்கள் செய்தது என்ன என்று அந்த தூதனிடம் விசாரித்தார்கள்.
அதற்கு அந்த தேவ தூதன் இந்த ஏழைத் தாயார், அவர்கள் திராணிக்கு மிஞ்சி தேவ ஊழியத்துக்கு கொடுத்தார்கள். அவர்கள் பெலத்துக்கு மிஞ்சி ஊழியம் செய்தார்கள் மட்டுமல்ல அந்தரங்கத்தில் தேவனிடம் அதிக நேரம் ஜெபித்தார்கள். இதனைக் கேட்டு விழித்துக்கொண்ட அவர்கள் தான் கண்டது சொப்பனம் என்று அறிந்து மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். "தேவனே, என் மீது அன்பு கொண்டு நான் செய்யும்படி எனக்கு உணர்த்திய சொப்பனத்தின் செய்திக்காக நன்றி" என்று சொன்னார்கள். எனவே தான் மட்டும் இந்த மூன்று காரியத்தைச் செய்யாமல் அதை மற்றவர்களும் செய்யும்படி கைப்பிரதி அடித்து அநேகருக்கு கொடுத்து உதவினார்கள்.
வேதத்தில் நியாயாதிபதிகளின் புஸ்தகத்தில் முதல் அதிகாரத்தில் அதோனிபேசேக்கின் சாட்சியின் வார்த்தை பொன் எழுத்தில் எழுதப்பட வேண்டியது: "நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிகட்டினார். எழுபது ராஜாக்களின் கைகால்களின் பெருவிரல்கள் என்னால் தறிக்கப்பட்டது; என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள். நான் செய்தபடி தேவன் எனக்கு செய்தார்" என்றார். சவுல் ராஜாவும் சுயநலம், பட்சபாதத்தால் ராஜமேன்மையிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். நாம் செய்கிற நன்மைக்கும் பலன் உண்டு, தீமைக்கும் பலன் உண்டு. நம்மால் யாருக்கும் தீங்கு நேரிட கூடாது.
மாம்சமான யாவரும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்றார். தேவ ஆவியினாலே நடத்தப்படுகிறவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். பரலோகத்திலே தேவதூதரைப் போல் இருப்பார்கள். விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக்கடவோம். விசுவாச மக்களுக்கு செய்த நன்மைக்கும் தீமைக்கும் தக்க பலனைப் பெறுவோம். தேவன் பலன் அளிக்கிறவர். ஆமென்.
- Rev. D.செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:-
எழுப்புதல் வாலிபர் முகாம் அன்று வாலிபர்கள் தாங்கள் எடுத்த தீர்மானத்தில் உறுதியாய் நிலைத்திருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864