By Village Missionary Movement
Monday, 01-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 01.09.2025
சத்தம் கேட்கும் செவி
"பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்" - சங்கீதம் 34:11
நான் இயேசு கிறிஸ்துவை அழுகிறவராக தரிசித்த பின், ஜனக் கூட்டம் நிறைந்த பஸ் ஸ்டாண்டு, மார்க்கெட் போன்ற இடங்களுக்கு சென்றாலே அந்த அழுகிற சத்தம் என் காதுகளில் கேட்கும். அப்பொழுதெல்லாம், நான் இவ்வாறு கூறுவதுண்டு 'இயேசப்பா அழாதீங்க நான் இருக்கிறேன்' என்று. அப்பா இயேசு கிறிஸ்துவின் கண்ணீரை துடைக்கும்படி ஆரம்பிக்கப்பட்ட ஊழியம் தான் கிராம மிஷனெரி இயக்கம்.
ஆனால் இன்று மக்கள் ஜெபம் செய்யும் போதும், வேதம் வாசிக்கும் போதும் கூட தேவன் பேசுவார் என திறந்த மனதோடு இருப்பதில்லை. வேதத்தில் கூட சபையார் கூடி சிறையிலடைக்கப்பட்ட பேதுருவுக்காக ஜெபிக்கின்றனர். பேதுரு கர்த்தரால் அற்புதமாய் விடுவிக்கப்பட்டு வந்து கதவைத் தட்டுகிறார். ரோதை என்ற பெண் அந்த சத்தத்தைக் கேட்டு, பேதுரு வாசலுக்கு முன்னே நிற்கிறார் என அறிவிக்கிறாள். உடனே எல்லோரும் பிதற்றுகிறாய் என சொல்கிறார்கள். ஏனென்றால் கதவைத் தட்டுகிற சத்தத்தை அவர்கள் கேட்கவில்லை. பேதுரு சிறையிலிருக்கிறார்; எப்படி தட்டுவார் சம்பந்தமில்லாமல் சொல்கிறது போல் தோன்றுகிறது.
நம் தேவன் இன்றும் ஜீவிக்கிறார், நம்மோடு பேசுவார். ஆதலால் அவர் சத்தம் கேட்க நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும். கரிசனையோடு, ஜெபிக்க கூடி வந்தவர்களில் ரோதை என்ற ஒரு பெண்ணின் செவி தான் திறந்திருந்தது, கதவை தட்டும் சத்தத்தைக் கேட்டு, அது பேதுரு என அறிய முடிந்தது. ஆம், நாமும் தேவனின் சத்தம் கேட்டு செயல்படும் போது தான் நாம் அற்புதத்தை சுதந்தரிக்க முடியும். மோசே இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்கு நேராக வழிநடத்திய போது குறைவுகள், தேவைகள் வந்தபோது, தேவனிடம் மோசே செல்கிறார். அவர் சொல்வதைக் கேட்டு செய்கிறார். அப்போது அற்புத விதமாய் அவர்கள் குறைவுகள், தேவைகள் சந்திக்கப்பட்டு முன்னோக்கி சென்றனர்.
பிரியமானவர்களே, எழுப்புதலுக்காக, நமக்காக, திருச்சபைக்காக ஜெபிக்கிறோம். ஆனால் அவர் சத்தத்தைக் கேட்கும் ரோதைகள் தேவை. முதலாவது அவர் சத்தம் கேட்க வேண்டும். நம் தேவன் பாரபட்சம் பார்ப்பவர் அல்ல, நம் உள்ளத்தை பார்ப்பவர். நீங்கள் அவரை முழுமனதோடு தேடினால் அவர் உங்களோடு பேசுவார். அதற்கு திறந்த செவியை உடைய ரோதை போல் நாம் இருக்க வேண்டும். அவர் சத்தத்தைக் கேட்கும் போது தான் அவர் உள்ளத்தின் ஏக்கத்தை நாம் அறிய முடியும். அந்த உந்துதல் நம்மை செயல்பட வைக்க முடியும். எனவே அவர் சத்தத்தை கேட்கும்படியான திறந்த செவியை கர்த்தரிடம் கேட்டு பெற்றுக் கொள்வோம்
- Bro. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:-
இம்மாத ஊழியங்களுக்காக, ஊழியர்களின் சுகத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864