By Village Missionary Movement
Saturday, 23-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 23.08.2025
இயேசுவை நோக்கி ஓடு
"...தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;..." - சங்கீதம் 73:28
அமெரிக்காவின் நீச்சல் வீராங்கனை ஃப்ளாரன்ஸ் கேட்விக், பசிபிக் மகா சமுத்திரத்திலுள்ள காட்டானினா தீவிலிருந்து தெற்கு கலிபோர்னியா வரையிலும் நீந்தி, சாதனை படைக்க வேண்டுமென்று விரும்பினார்கள். இதன் மொத்த தூரம் 34 km மிகவும் ஆபத்தான பகுதி. யாரை விழுங்கலாம் என்று சுற்றித் திரிகிற சுறா மீன்களும், மிக உயரமாக எழும்பும் அலைகளும், பார்வையை மறைக்கும் அளவிற்கு பனிமூட்டமும், இந்தப் பகுதியில் நீந்துவதை மிகவும் சிரமமாக்கின. ஆனாலும் எதையும் பொருட்படுத்தாது கேட்விக் மிகுந்த மன தைரியத்துடன் நீந்தினார். பல மணி நேரம் நீந்தியதால், அவருடைய சரீரம் குளிரினால் உறைந்து போகத் தொடங்கியது. இனிமேலும் என்னால் நீந்த முடியாது என்று நினைத்து, தன்னை தண்ணீரிலிருந்து தூக்கி விடும்படி கூறினார். தூக்கிவிடப்பட்ட பின்பு தான், தான் கரைக்கு மிக அருகாமையில் இருப்பதையும், இன்னும் சற்று கஷ்டப்பட்டு கொஞ்ச தூரம் கூட நீந்தியிருந்தால் உலக சாதனை படைத்திருக்கலாமே என்று வேதனை பட்டார்கள். 'சாதனை வீராங்கனை' என்ற பட்டத்தைப் பெறும் வாய்ப்பை இழந்ததை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார்கள்.
உலகில் வாழ்ந்த பலரும் தங்கள் ஓட்டத்தை நன்றாக ஓடி முடித்து சென்றுவிட்டார்கள் என்பது போல் தோன்றினாலும், ஏதோ ஒரு காரணத்தினால் அதை ஜெயமாக ஓடி முடிக்காதவர்களாகவே கடந்து சென்றுள்ளனர். நம் விசுவாச ஓட்டத்திலும் பல வேளைகளில் சாத்தான் நம்மை வீழ்த்த பாடுபடுவான். வேதத்திலே, மோசேயின் ஓட்டம் மிகவும் சிறப்பாக இருந்தாலும், உலக கானானுக்குள் பிரவேசிக்க தவறியதால், பரம கானானுக்குள்ளும் போக கூடாதவர் என்று மோசேயின் சரீரத்தைக் குறித்து தூதர்களோடு சாத்தான் தர்க்கித்ததாக எழுதப்பட்டுள்ளது (யூதா 9). இதே போல் எலியாவும் வாழ்க்கை சலித்துப் போய் பேச ஆரம்பித்தார். யோனாவும் இதே போல் மரணத்தை விரும்புவதாக கூறினார். சாலொமோனும் தோல்வியுற்றார். ஃப்ளாரன்ஸ் கேட்விக்கும், கரையை எட்டும் தூரம் குறைவாக இருந்த போதிலும், வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தது தனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்றார்கள்.
இன்று நாமும் கூட பல நேரங்களில் வேதத்தை வாசித்து தியானிக்காமல், விசுவாசத்தில் குறைவுபட்டவர்களாய் நம் வாழ்க்கையின் ஓட்டத்தை பூரணமாய் ஓடி முடிக்காமல், "போதும் கர்த்தாவே, போதும்" என்கிற மனநிலைக்கு உள்ளாகிறோம். சூழ்நிலை எதுவானாலும் சுயத்தையோ, சூழ்நிலையையோ பாராமல் இயேசுவை நோக்கி நாம் ஓடுவோமானால், நிச்சயமாக நம் ஓட்டத்தை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த ஓட்டம் வெற்றி பெறும். அப்போஸ்தலர் கவனமாய் ஓடினார்கள். தேவனை நாம் அண்டிக்கொண்டு, இயேசுவை மாத்திரம் நோக்கிப் பார்த்தால், சாத்தான் வீழ்ச்சி அடைவதையும், நாம் வெற்றி பெறுவதையும் காண முடியும். நம் ஓட்டம் ஜெயமாகும். ஆமென்.
- Mrs. பாத்திமா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:-
Arise Joshua & Esther திட்டத்தின் மூலம் ஊழியர்களின் பிள்ளைகள் யோசுவாக்களாக, எஸ்தர்களாக எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864