By Village Missionary Movement
Wednesday, 20-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 20.08.2025
சும்மாயிரு
"கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்" - யாத். 14:14
ஒரு முறை என் வாழ்க்கையில் ஒரு நபரோடு ஏற்பட்ட பிரச்சனை நீண்டு கொண்டே சென்றது. இதை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த நான், மறுநாள் காலையிலேயே அந்த நபரை சந்தித்து, எப்படியாவது என் நிலைமையை பக்குவமாய் எடுத்துக்கூறி பின்னர் சமாதானத்துடன் விலகிவிடலாம் என்று எண்ணியபடியே தூங்கச் சென்றேன்.
இரவில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த வேளையில் ஒரு கனவு வந்தது. அதில் சேற்றில் ஆள் உயரத்துக்கு வளர்ந்திருந்த புற்களை, செடிகளை நான் சுத்தம் செய்ய முற்பட்டபோது, அதினுள்ளிருந்து அநேக பன்றிகளும், விஷஜந்துக்களும் வெளியே வந்தன. அதைப் பார்த்தவுடன், திடுக்கிட்டு விலகி நின்றேன். அப்பொழுது ஒரு சத்தம், இதை என்னிடம் விட்டுவிடு, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கேட்டது. நானும் அமைதியாக நின்று விட்டேன். சிறிது நேரத்திலேயே, சேறும் சகதியும் வேண்டாத செடிகளும் மண்டியிருந்த அந்த இடம் சுத்தம் பண்ணப்பட்டு, அதை கடந்து செல்ல பாதையும் பெற்று அழகாக காட்சியளித்தது. "நீ அந்த நபரோடு போராடினால், நீ எதிர்பார்த்திராத நிறைய சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், அதினால் நீ சும்மாயிரு, நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஆண்டவர் என்னிடம் கூற விரும்புவதை உணர்ந்தேன். மறுநாள் காலையில் ஆண்டவரே, இந்த விஷயத்தை உம்மிடம் ஒப்படைத்து விட்டேன். இதற்காக இனி நான் எந்த பிரயாசமும் எடுக்கப் போவதில்லை. எனக்காக நீர் வழக்காடும், எனக்காக நீர் யுத்தம் செய்யும் என்று ஜெபித்து என் நாளை தொடங்கினேன். எல்லாருடைய கண்களும் ஆச்சரியப்படத் தக்கவிதமாய் ஆண்டவர் என்னை அந்த பிரச்சனையிலிருந்து விடுவித்தார். அதை எளிதில் கடந்து வரவும் உதவி செய்தார்.
இதை வாசிக்கின்ற தேவனுடைய ஜனங்களே, உங்களுடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகள், போராட்டங்கள், கவலைகள், கண்ணீர்கள் என எல்லாவற்றையும் நான்தான் சரி செய்ய வேண்டும் என்றும், நான் பேசினால், நான் முயன்றால் சரி செய்து விடலாம் என்றும் உங்கள் சுயத்தையும், திறமைகளையும் நம்பி ஏமாற்றம் அடைந்திருக்கிறீர்களா? இல்லை, மனிதர்களிடமிருந்து உதவியை எதிர்பார்த்து சோர்ந்து போயிருக்கிறீர்களா?
இன்றைக்கே உங்கள் கவலைகளையும், சூழ்நிலைகளையும் ஆண்டவரின் கரத்தில் அர்ப்பணியுங்கள். செங்கடலை இரண்டாகப் பிரித்த தேவன், நீங்கள் அறியாததும் உங்களுக்கு எட்டாததுமான பெரிய காரியங்களைச் செய்வார். அன்று மரியாளுக்காக யோசேப்பினிடத்தில் பேசிய தேவன், யாக்கோபிற்காக லாபானிடத்தில் பேசிய தேவன் இன்றும் உங்களுக்காக பேசுவார். உங்களுக்கு முன் சென்று கோணலான பாதைகளை செவ்வையாக்குவார். பராக்கிரமமுள்ள கர்த்தர் உங்களோடு கூட இருந்து செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும். அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக் கேதுவானவைகளே. கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை, கஷ்டங்கள் தீர்ந்திடும். ஆமென், அல்லேலூயா.
- Mrs. ஐடா கிங் டேவிட்
ஜெபக்குறிப்பு:-
முகாமின் பின்தொடர் பணிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864