By Village Missionary Movement
Wednesday, 13-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 13.08.2025
எதிர்நீச்சல்
"...தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" - ரோமர் 8:28
என்னுடைய தகப்பனார் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார்கள். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். கர்த்தர் எங்களுடைய குடும்பத்தை மிகவும் ஆசீர்வதித்திருந்தார். எங்களுக்கு அந்நாட்களில் 300 கோழிகள் கொண்ட கோழிப்பண்ணை, 6 மாடுகள், 15 தென்னை மரங்கள் என கர்த்தர் அப்படியாக எங்களை ஆசீர்வதித்திருந்தார். வீட்டில் அடுப்பினடிக் காரியங்கள், வீட்டை நிர்வகிப்பது என்னுடைய வேலையாயிருந்தது. வீட்டில் நான் மூத்த பிள்ளை என்பதால் வீட்டையும் கவனித்து விட்டு, என்னுடைய ஆசிரியர் பணியையும் செய்து வந்தேன்.
பின்னர் நான் திருமணமாகி கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்தேன். என்னுடைய கணவருடன் பிறந்தவர்களும் ஆறு பேர். நானும் என்னுடைய கணவரும் வேலை பார்த்ததினால் குடும்பத்தை நடத்திச் செல்லும் பொறுப்பும் எனக்கு கொடுக்கப்பட்டது. அதனால் குடும்பத்திலுள்ள அநேக சிக்கல்கள், குழப்பங்கள் என எல்லாவற்றையும் நாங்கள் சமாளிக்க வேண்டியதாயிருந்தது. பல பாடுகள், உபத்திரவங்களை சகிக்க வேண்டியதாயிருந்தது. கர்த்தரின் பெரிதான கிருபையினால் அமிழ்ந்து மடிந்து விடாமல் எதிர்நீச்சல் போட்டு, பல நெருக்கமான சூழ்நிலைகளில் தேவன் துணையாய் நின்று எல்லாவற்றையும் கடக்க கிருபை பாராட்டினார். இப்படியாக பல உபத்திரவங்களை நான் மேற்கொண்டேன். அதற்கு கிடைத்த பலனாக 35 வருடங்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிய தேவன் எனக்கு அநுக்கிரகம் பாராட்டினார். நான் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த நாட்களில் பள்ளியை அமைதியாகவும், சமாதானமாகவும் திறம்பட நிர்வகிக்கும் திறனையும், சிலாக்கியத்தையும் தேவன் எனக்கு கொடுத்தார். என்னுடைய சாட்சியை தேவநாம மகிமைக்காக சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கன்பானவர்களே! பல சிட்சைகளின் வழியாகத்தான் கர்த்தர் நம்மை உயர்த்த முடியும். உபத்திரவங்களும், பாடுகளும் நம்மை தேவனை மட்டுமே சார்ந்து கொள்ளுகிறவர்களாக மாற்றுகிறது. அப்படியாக உபத்திரவங்களின் ஊடாக நாம் செல்லும் போது, தேவன் நம்மை ஆசீர்வாதத்தினால் அலங்கரிப்பார். எனவே நம் வாழ்வில் வரும் காரியங்கள் தீமையானது போல் தோன்றினாலும் அதை நன்மையாகவே தேவன் முடியப்பண்ணுவார் என்ற விசுவாசத்துடன் எதிர் நீச்சலடித்து வெற்றி பெறுவோம். ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்வாராக.
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:-
தேவன் முன்குறித்த ஒவ்வொருவரும் அந்த நாளில் தொடப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864