By Village Missionary Movement
Friday, 08-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 08.08.2025
"ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது" - லூக்கா 24:16
நான் பள்ளிப் படிப்பில் Gold medal வாங்கியிருந்த போதும், மேற்படிப்பில் தோல்வியுற்றேன். அத்தருணத்தில் என் எதிர்காலம் எப்படி இருக்கும், யார் என்னை வழி நடத்துவார்கள் என கலங்கி நின்ற போது என் வாழ்வே இருளாக தோன்றினது. இயேசுவானவர் என்னோடுகூட இருக்கிறார் என நான் உணர்ந்த போது என்னுடைய மறைக்கப்பட்ட கண்கள் திறக்கப்பட்டது. ஆண்டவர் என்னைத் தேற்றி, உடனிருந்து வழி நடத்தினார். என்னை ஆசீர்வதித்து வெற்றியின் பாதையில் என்னை நடத்தினார். தோல்வியடைந்த பாடங்களை திரும்பவும் எழுதி வெற்றி பெறவும், பின்பு வங்கியில் அதிகாரியாகப் பணிபுரியவும் உதவி செய்தார். இன்று வரை அவர் என்னை அவர் வழியில் நடத்தி வருகிறார்.
இதேப்போல தான் மிகவும் கலக்கமான சூழ்நிலையில் சீஷர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. சீஷர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள். போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். இப்படியாக அவர்கள் பேசிக் கொண்டு போகையில், இயேசுவும் அவர்களோடு இணைந்து நடந்து சென்றார். ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. இப்படியாக இயேசுவானவர் சிலுவையில் பாடுபட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பார் என வாக்கியங்களை எடுத்துரைத்துவிட்டு, அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார். அவர்கள் அவரை வருத்திக் கேட்டு கொண்டபடியினால் அவர்களுடனே தங்கும் படி உள்ளே போனார். அவர்களோடே அவர் பந்தியிருக்கையில் அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து அதை பிட்டு அவர்களுக்கு கொடுத்தபோது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு அவரை அறிந்தார்கள்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நம் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது நமக்கு யார் உதவி செய்வார்கள் என்று கலங்குகிறோம். ஆனால் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து வல்லமையுடன் நம்மோடு கூட இருப்பதை அறியாதபடிக்கு நம்முடைய கண்கள் மறைக்கப்பட்டிருக்கிறது. அந்த மறைக்கப்பட்ட கண்களை தேவன் திறக்கும் போது தான் நம்மோடு இருக்கிறேன் என்று வாக்குப்பண்ணினவரின் அருமை நமக்குத் தெரியும். நம் வாழ்க்கையில் ஏற்படுகின்ற தோல்விகளுக்கும், இயலாமைகளுக்கும் எந்த விதத்திலேயும் தற்கொலை தீர்வாகாது. எந்த சூழ்நிலையிலும் நம்மை கைவிடாத இயேசு கிறிஸ்து உயிரோடெழுந்தவராய் நம்மோடு இருக்கிறார் என்பதை மறந்துவிட கூடாது. எப்போதெல்லாம் மறைக்கப்பட்ட கண்கள் திறக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் இயேசுவின் வல்லமையும், அவர் நம்மோடு இருக்கிறார் என்பதையும் உணர முடியும். வெற்றிக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கு நேராக நம்மை திருப்ப, நடத்த நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து, அவரிடம் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வீர்களாக!
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:-
வாலிபர்களை அழைத்து வருகிற ஓட்டுநர்களின் ஞானத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864