By Village Missionary Movement
Tuesday, 05-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 05.08.2025
நம்முடைய இலக்கு
"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்" - பிலிப்பியர் 3:14
ஒரு அரசர் தன் மகளை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்து, ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இளவரசியை திருமணம் செய்து கொள்ள விரும்புபவர், என் மகளை ஓட்டப்பந்தயத்தில் தோற்கடிக்க வேண்டும். பலர் இளவரசியின் மீது விருப்பம் கொண்டு, ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடி, ஓடி களைத்துப் போயினர். தோற்றுப் போன அனைவரும் தர்ம அடிவாங்கி திரும்பி போயினர். ஒரு இளவரசன் போட்டியில் பங்கு பெறவும், இளவரசியை மணந்து கொள்ளவும் தயாரானான். ஓட்டப்பந்தயம் ஆரம்பமானது. இளவரசியை அவன் முந்தி ஓடிக்கொண்டிருந்தான். ஒரு அழகான தங்கப்பழம் அவனுக்கு முன்பாக எறியப்பட்டது. அவன் அதை எடுத்துக்கொண்டு திரும்பவுமாக முன்னேறினான். இரண்டாவது முறையும் அப்படியே தங்கப்பழம் உருண்டு வந்தது. இளவரசனும் அதை எடுத்துக் கொண்டு முன்னேறியவாறு ஓடினான். இலக்கை அடையும் சற்று தூரத்திற்கு முன் கடைசி பழமும் வீசப்பட்டது. தங்கப்பழத்திற்கு ஆசைப்பட்டு இலக்கை தவற விட்டான். இளவரசியை மணக்கும் வாய்ப்பை இழந்தான்.
பிரியமான தேவ மக்களே! இன்று நாம் எப்படி வாழ்கிறோம் ? உலகத்தின் ஆசா பாசங்களை கண்டு, தங்களது இலக்கை தவறவிட்டவர்கள் அநேகருண்டு. பிசாசானவன் நம்மை எப்படியாகிலும் உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்து, தேவன் நமக்கு நியமித்த இலக்கை அடைய விடாமல் தடுக்க பலவிதமான உபாய தந்திரங்களை கையாளுகிறான். நாம் தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருக்க வேண்டும். இளவரசிக்கு தெரியும் பலர் தோற்றுப் போய் தர்ம அடிகளை பெற்றார்கள் என்று. முதல் தங்கப்பழத்தை பார்த்தவுடன் ஏதோ சதி வேலை துவங்குகிறது என்று எண்ணியிருக்க வேண்டும். ஆனால் அவனோ அதை எடுத்துக்கொண்டு முன்னேறி விட்டான். இரண்டாவது தங்கப்பழத்தை அவன் முன் போட்டவுடன், உறுதியாக சதி தான் என்று அந்த பழத்தை எடுக்காமல் ஓடியிருக்க வேண்டும். ஆனால் அவனோ மூன்றாவது பழத்தையும் எடுக்க குனிந்த போது, இளவரசி இலக்கை தொட்டு விட்டாள். இளவரசனும் தோற்றுப் போனான்.
அன்பு சகோதரா! அன்பு சகோதரி! சிம்சோனின் வாழ்க்கை உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும். அவனது பெலன் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க பெலிஸ்தியர்கள் தெலீலாளை பயன்படுத்தினார்கள். தெலீலாள் அவனிடம் உன்னுடைய பெலன் எங்கேயிருக்கிறது என்று ஒன்றுக்கு மூன்று முறை கேட்டாள். சிம்சோன் தெளிவடைந்து எனக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது என்று அறிந்து அவளை விட்டு விலகியிருக்க வேண்டும். இல்லையென்றால் வாயை திறவாமலிருந்திருக்க வேண்டும். அவனோ தன் பெலன் எங்கே இருக்கிறது என்ற உண்மையை சொன்னதினால் தோற்றுப் போய், கண்கள் பிடுங்கப்பட்டவனாக காணப்பட்டான். ஒருமுறை அல்ல, இரண்டு முறை ஒரு காரியத்தை நம்மிடம் கேட்டாலே எச்சரிக்கையாக இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். மீகா 7:5 ல் "சினேகிதனை விசுவாசிக்க வேண்டாம், வழிகாட்டியை நம்ப வேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு" என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. நீங்கள் பரலோகம் போகக்கூடியவர்கள். உங்களது இலக்கை தவறவிடாதீர்கள். எச்சரிக்கை! ஆமென், அல்லேலூயா!
- Pr. S. A. இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:-
வாலிபர் முகாமன்று பாடகர் குழுவை தேவன் அபிஷேகித்து பயன்படுத்த ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864