Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01.08.2025
Share:

By Village Missionary Movement

Friday, 01-Aug-2025

இன்றைய தியானம்(Tamil) 01.08.2025

 

அரசியல்வாதி

 

"...தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான்..." - யோவான் 7:18

 

இஸ்ரவேல் ஜனங்கள் கானானுக்குப் பிரயாணப்படுகையில், மோவாபில் பாளையமிறங்கியதும் ராஜா பாலாக் பயப்படுகிறார். ஏனென்றால் கர்த்தர் அவர்களோடிருந்து இதுவரை செய்த காரியத்தையெல்லாம் கேள்விப்பட்டிருந்தார். எனவே தீர்க்கதரிசியைக் கொண்டு சபித்து விட்டால், அவர்கள் சபிக்கப்பட்டு போய்விடுவார்களே என பிலேயாம் தீர்க்கதரிசியை அழைக்க பிரபுக்களை அனுப்புகிறார். பிலேயாம் கர்த்தர் சொன்னால்தான் வருவேன் என்று சொல்லி, கர்த்தரிடம் விசாரிக்கிறார். கர்த்தர் அனுமதிக்கவில்லை என்றதும் நான் வரமாட்டேன் என சொல்லி அனுப்பி விடுகிறார். பின்பு பாலாக் அதிக கனவான்களான பிரபுக்களை அனுப்புகிறார். அதற்கு பிலேயாம் அவர்களிடம், " வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் தந்தாலும் என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது" என்றார். ஆனால் உள்ளத்திலோ செல்ல விருப்பத்தோடிருக்கிறார். தேவன், அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அவர்களை சபிக்க செல்லக்கூடாது என சொன்ன பின்பும், மனதில் ஆசை எழுந்ததால் இனிமேல் கர்த்தர் என்ன சொல்லுகிறார் என பார்ப்போம் என்கிறார். கர்த்தர் அவர் மனதை அறிந்து போ, ஆனால் நான் சொல்லும் வார்த்தையின்படி மாத்திரம் செய்ய வேண்டும் என்கிறார். பிலேயாம் மறுநாள் காலமே எழுந்து போகிறார். அதனால் கர்த்தருக்கு கோபம் மூண்டது (எண். 22:22).

 

ஆம், இன்று அநேக கிறிஸ்தவர்களின் நிலை இதுபோலத்தான் இருக்கிறது. வாய் கர்த்தரின் வார்த்தையைச் சொல்லும், அவரை புகழும். ஆனால் அவர்கள் சிந்தையும் செய்கையெல்லாம் அவரைக் கோபப்படுத்துவதாயிருக்கும். இதனைத்தான் தேவன், இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது (ஏசாயா 29:13) என்கிறார். கிறிஸ்துவின் அன்பைப் பெற்று கிறிஸ்தவர்களாயிருக்கிறவர்கள் அவரின் அன்பான வார்த்தைகளைக் கேட்டும் செய்வதெல்லாம் வம்பு தான். சில அரசியல்வாதிகள் தாங்கள் பேசும்போது, மக்களிடமிருந்து ஆதரவும் ஆதாயமும் வேண்டி செவிக்கினிய வார்த்தைகளை பேசுவார்கள். அது போலத்தான் கிறிஸ்தவர்களும் பல நேரங்களில் பேச்சு ஒன்று, செயல் ஒன்று என்பதாய் வாழ்கிறார்கள்.  

 

பிரியமானவர்களே, எழுப்புதல் என பேசிக்கொண்டு அரசியல்வாதிகள் போல் வாழ்வதில் பலனில்லை. கிறிஸ்துவின் அன்பை ருசிக்கிற ஒவ்வொருவரும், அவரின் வார்த்தையை வாசிக்கிற, கேட்கிற ஒவ்வொருவரும் அதின்படி வாழ்ந்தால் எழுப்புதல் வந்து விடும். உலகம் வார்த்தையை பார்ப்பதில்லை, நம் வாழ்வை தான் பார்க்கிறது. அன்பை காட்ட வேண்டிய திருச்சபைகள் கூட, சில நேரங்களில் சண்டை, குழப்பம் இவற்றைத் தான் காட்டுகிறது. இதனால் தான் இயேசு கிறிஸ்து நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள் (யாக். 1:22 ) என்றார். அவர் சொல்லிய வார்த்தையின்படி வாழ்வோம். கர்த்தர் சொன்ன ஆசீர்வாதங்களைச் சுதந்தரிப்போம்.

- K. டேவிட் கணேசன்

 

ஜெபக்குறிப்பு:-

நம் ஊழியர்கள், உடன் ஊழியர்கள் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட வேன், பஸ்களுக்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al