By Village Missionary Movement
Friday, 25-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 25.07.2025
கைவிடாத கர்த்தர்
"என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்ளுவார்" - சங்கீதம் 27:10
என்னுடைய பெயர் மாரியம்மாள். பெண் பிள்ளைகளாய் பிறந்ததாலேயே நானும் என் அக்காவும் என் பெற்றோர்களால் கைவிடப்பட்டோம். உறவினர்கள் ஒரு சிலரின் உதவியுடன் எங்கள் நாட்களை கழித்து வந்தோம். கொடுமை, இளமையில் வறுமை, என்று சிறு பிராயத்திலேயே பல இன்னல்களுக்கு உள்ளானோம். ஆண்டவரின் மிகப்பெரிய இரக்கத்தால் எங்கள் ஊருக்கு கிராம மிஷனெரி இயக்கத்தை சேர்ந்த மிஷனெரி அண்ணன் வந்தார்கள். ஆண்டவரை பற்றி அப்போதுதான் எங்கள் ஊரில் ஒரு அறிமுகம் ஏற்பட்டது. நாங்களும் இயேசப்பாவை தெரிந்து கொண்டோம்.
அந்த மிஷனெரி அண்ணன் மூலமாக நாங்கள் கிராம மிஷனெரி இயக்கத்திற்கு வந்து, டேவிட் கணேசன் அவர்களை சந்தித்தோம். அவர்களே எங்களை பொறுப்பு எடுத்துக் கொண்டார். தங்கள் பிள்ளைகள் போல் எங்களை பாதுகாத்து, கல்வி தந்து, எங்கள் தேவைகளை எல்லாம் சந்தித்து பாசத்துடன் வளர்த்தார். நான் சிறுவயதில் பிரைமரி காம்ப்ளக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சாப்பிட கூட முடியாத நிலையில் இருந்தேன். தொடர்ந்து எனக்காக அனைவரும் ஜெபித்தனர். ஆண்டவரின் கிருபையால் பரிபூரண சுகம் கிடைத்தது. அவருடைய தழும்புகளால் குணமானேன் (ஏசாயா 53:5). நான் பள்ளி படிப்பை முடித்தவுடன் இராக்லாண்ட் பைபிள் காலேஜில் இரண்டு வருடம் படித்துவிட்டு, கடந்த ஆறு வருடங்களாக கிராமங்களுக்குச் சென்று சிறுவர் மற்றும் வாலிபர் மத்தியில் ஊழியம் செய்து வருகிறேன். டேவிட் டேடியும், ஜெபா மம்மியும் எனது திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தனர். கிறிஸ்துவுக்குள்ளான நூற்றுக்கணக்கான உறவுகள் ஒன்று கூட எங்கள் திருமணம் ஆச்சரியமாய் நடந்து முடிந்தது. ஆசீர்வாதமான ஒரு திருமண வாழ்க்கையை எனக்கு ஆண்டவர் கொடுத்து என்னை நேசிக்கும் குடும்பத்தையும் கொடுத்திருக்கிறார். நானும் எனது கணவரும் மயிலாடுதுறையில் குடும்பமாக ஆண்டவரின் ஊழியத்தை செய்து வருகிறோம். அவருக்கே சகல துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக.
எனது சாட்சியை வாசிக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! நீங்களும் என்னைப் போல கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறீர்களோ? பெற்றோர், உற்றார் உறவினரால் மறக்கப்பட்டு காணப்படுகிறீர்களோ? கலங்காதீர்கள். ஆண்டவர் உங்களை மறக்கவில்லை. நம்மை அவர் திக்கற்றவர்களாக விடுவதில்லை. அவரிடம் உங்கள் எதிர்காலத்தை அர்ப்பணித்து விடுங்கள். அவர் ஆச்சரியமாய் நடத்துவதோடு மாத்திரமல்ல பிறருக்கு ஆசீர்வாதமாய் உங்களை மாற்றுவார். ஆமென்.
- Mrs. மாரியம்மாள் குணசீலன்
ஜெபக்குறிப்பு:-
வாலிபர் எழுப்புதல் முகாமில் தமிழகமெங்குமிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் வாலிபர்கள் கலந்து கொள்ள ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864