By Village Missionary Movement
Tuesday, 22-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 22.07.2025
வாக்கு மாறாதவர்
"...வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே" - எபிரெயர் 10:23
1995 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல், வாக்குத்தத்தங்களை சொல்லி ஜெபிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்தேன். அன்று எனக்கு கிடைத்த வாக்குத்தத்தம், "நான் உன்னோடு இருப்பேன்" (ஏசாயா 43:2) என்பது! தினமும் அந்த வாக்குத்தத்தத்தை சொல்லி ஜெபித்து வந்தேன். அந்த வருடம் மே மாதம் குடும்பமாக ஒரு மலை வாசஸ்தலத்திற்குச் சென்று தங்கியிருந்தோம். ஒரு நாள் இரவு மின்விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கும் பாதையில் நடந்து சென்ற போது, தவளை போன்ற ஏதோ ஒன்று என் இடது கணுக்காலில் மோதிவிட்டுச் சென்றது. என்னவென்று பார்த்தபோது சுமார் நான்கு அடி நீளமுள்ள நல்ல பாம்பு படம் எடுத்தவாறு நின்று கொண்டிருந்தது. அது என்னை கடித்து விட்டதா என்று பார்ப்பதற்கு என் அறைக்குள் ஓடிய போது "நான் உன்னோடு இருப்பேன் என்று சொன்னது நினைவில்லையா?" என்ற குரல் என் காதில் கேட்டது. ஆண்டவர் நான் சொல்லி ஜெபித்து வந்த வாக்குத்தத்தத்தை நினைப்பூட்டியதை எண்ணிப் பார்த்து அவருக்கு நன்றி செலுத்தினேன்.
அதே வருடம் அக்டோபர் மாதத்தில் என் கணவருக்கு wheezing காரணமாக திடீரென்று ஏற்பட்ட மூச்சுத் திணறலினால் மருத்துவர், இன்னும் அரை மணி நேரம் சென்றிருந்தால் காப்பாற்றியிருக்க முடியாது என்று கூறிய போது அதிர்ச்சி அடைந்தேன். அப்போதும் ஆண்டவர் எனக்கு எதிரிலிருந்த "நான் உன்னோடு இருப்பேன்" என்ற வாக்குத்தத்த அட்டையை எனக்கு காண்பித்தார். அவரை விசுவாசித்து, கனப்படுத்தி ஜெபிக்கிற ஜெபத்தில் அவர் எவ்வளவு பிரியமாயிருக்கிறார் என்று பார்த்தீர்களா? வாக்குத்தத்தங்களை நம்பி விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது தேவன் பதில் கொடுக்கிறார்.
பிரியமானவர்களே! வாக்குத்தத்தங்களுக்கு நிபந்தனைகள் உண்டு. அவற்றிற்கு கீழ்ப்படிவது அவசியம். சில வாக்குத்தத்தங்கள் மறைமுகமாக நிறைவேறும். நாம் விரும்பும் விதத்தில் நிறைவேறாமல் வேறு வகையில் மிகுந்த ஆசீர்வாதமாக நிறைவேறும். தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற பொறுமை நமக்கு தேவை (எபிரெயர் 10: 36). மிக முக்கியமான காரியம் பூமிக்குரிய காரியங்களுக்காக மாத்திரமே வாக்குத்தத்தங்களை நம்பியிருக்கக் கூடாது. "நித்திய ஜீவனை அளிப்பேன்" என்பதே வேதம் குறிப்பிட்டுத் தரும் வாக்குத்தத்தம் (1 யோவான் 2: 25). இந்த வாக்குத்தத்தத்தை விசுவாசித்து நமக்காகவும், குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்கள், தேசத்தார் யாவருக்காகவும் ஜெபிக்க வேண்டியது நம்மேல் விழுந்த கடமை. செய்வோமா?
- Mrs. கீதா ரிச்சர்டு
ஜெபக்குறிப்பு:-
ஆகஸ்ட் 15 முகாமிற்காக நம் ஊழியர்கள் சந்திக்கும் போதகர்கள், ஊழியர்கள் கண்களில் தயை கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864