By Village Missionary Movement
Wednesday, 16-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 16.07.2025
நம்பிக்கையற்ற என் வாழ்வில்...
"ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்" - சங்கீதம் 65:2
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நான், என் பெற்றோரால் பக்தியோடு வளர்க்கப்பட்டேன். வேதவாசிப்பு, ஜெபம், ஆலயம் செல்வது என எல்லாவற்றையும் தவறாமல் செய்து வந்தேன். 11 ஆம் வகுப்பு படிக்கும் போது தவறான பழக்க வழக்கமுள்ள நண்பர்களுடன் சேர்ந்து வகுப்புகளை புறக்கணிப்பது, பள்ளி சீருடையில் பீர் வாங்கி கொடுப்பது இப்படியாக செய்து வந்தேன். 12 ஆம் வகுப்பு படிக்கும் போது, என் வாழ்வில் அடுத்தடுத்து தோல்விகள் ஏற்பட்டது. அதை நண்பர்களோடு பகிரும் போது, நீயும் எங்களைப் போல கஞ்சா அடி, எல்லாம் சரியாகிவிடும் என்றனர். நானும் பீர், கஞ்சா, மற்றும் பல போதை பொருட்களுக்கு அடிமையாகிவிட்டேன். ஒரு முரட்டாட்டமான வாழ்க்கை வாழ்ந்தேன். என்னைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் என் பெற்றோருக்கு தெரிவித்தனர். இதனால் அவர்கள் இந்த நண்பர்களை விட்டுப் பிரிந்தால் ஒரு மாற்றம் வருமா என்று மிகுந்த வேதனையோடு வேறொரு ஊருக்கு வந்தனர். இங்கு வந்ததும் என் தீய பழக்க வழக்கங்கள் கூடினதே அல்லாமல் குறையவில்லை. பல நண்பர்கள் போதை ஊசி போட்டு இறந்தும் என்னால் அதைவிட முடியவில்லை. வீட்டில் இருக்கும் போது போதை அதிகமாகி என் பெற்றோரை உள்ளே வைத்து கதவை பூட்டி விட்டு, சாவியை எடுத்துக்கொண்டு கேசை திறந்துவிட்டு கொன்று போடுவேன் என்று மிரட்டினேன்.
லாக் டவுன் நாட்களில் "ஜெபிக்கலாம் வாங்க" நிகழ்ச்சியை என் பெற்றோர் என்னை பார்க்கச் சொன்னார்கள். வேண்டா வெறுப்பா பார்ப்பேன், மறுபடியும் போய் போதை ஊசி போடுவேன். ஒரு நாள் அதில் ஒரு சாட்சியை வாசித்தார்கள், ஐந்து நிமிடம் ஜெபிக்க டைம் கொடுத்தார்கள். இயேசுவே, இந்த போதை வஸ்துக்களிலிருந்து என்னை விடுதலையாக்கும் என்று ஜெபித்தேன். நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டில் ஜெபிக்கும் அறையில் போய் தனியாக இயேசுவிடம் பேசினேன். அப்போது ஒரு குரல் என்னிடம், "இரண்டு நாட்கள் எந்த போதையும் நீ போடக்கூடாது. நான் உனக்கு விடுதலை தருவேன்" என்று என் உள்ளத்தில் பேசுவதை உணர்ந்தேன். இயேசுவே, இரண்டு நாட்கள் என்னால் போதையில்லாமல் இருக்க முடியாது. எனக்கு நீங்க தான் பெலன் தரணும் என்று கண்ணீரோடு ஜெபித்தேன். எத்தனை அற்புதம், தேவன் என் எல்லா போதை பழக்கத்திலிருந்தும் இரண்டே நாளில் பரிபூரண விடுதலையை தந்தார். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக. இப்பொழுது நான் கிராம மிஷனெரி ஊழியத்தில் மீடியா துறையில் ஊழியம் செய்து வருகிறேன்.
நண்பர்களே! ஒரு வேளை நீங்களும் இப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் சிக்கி வெளியே வர முடியாமல், பெற்றோரை, குடும்பத்தை வேதனைக்குள்ளாக்கி கொண்டிருக்கிறீர்களோ? இதிலிருந்து வெளிவர வேண்டுமென்ற கதறலோடு ஆண்டவரை நோக்கி ஜெபியுங்கள். என் பெலத்தால், முயற்சியால் முடியாததை நீரே எனக்கு செய்யும் என்று ஜெபித்துப் பாருங்கள். நிச்சயம் விடுதலையாவீர்கள். என்னை விடுவித்தவர் உங்களை விடுவிப்பது அதிக நிச்சயமல்லவா?
- B. டேவிட்
ஜெபக்குறிப்பு:-
ஜார்க்கண்ட் பணித்தளங்களில் நடைபெறும் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864