By Village Missionary Movement
Tuesday, 15-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 15.07.2025
என்னதான் ஆனால் என்ன?...
"...உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ... தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்" - ரோமர் 8:36,39
என் பெயர் பிரவீன் ஜான் தாமஸ். 2009 ஆம் ஆண்டு என்னுடைய 15 வது வயதில், எனது இரண்டு கிட்னியும் செயலிழந்தது. 7 மாத கால டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பின், என்னுடைய தாயாரது கிட்னியை என் உடலில் பொருத்தி அதிகபடியான மருந்து மாத்திரையை உண்டு வந்தேன். இந்நிலையில் என்னுடைய நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு விட முடியாமல் ICU ல் அனுமதிக்கப்பட்டேன். எனவே எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக காத்திருந்தபோது, எனக்கு அருகில் இருந்து ஒரு நிழல் போன்ற உருவம் கடந்து சென்று நான் படுக்க வேண்டிய அந்த இடத்தில் படுத்ததை பார்த்தேன். அதே இடத்தில் என்னையும் படுக்க வைத்தார்கள். எண்டோஸ்கோபி எடுத்த ஒரு வயதான டாக்டர் என் வாயின் வழியாக ஒரு டியுப்பை விட்டு நுரையீரலை பரிசோதித்தார். எனது இடப்பக்க நுரையீரல் கரும்பச்சை நிறமாய் பாசிபிடித்திருந்தது போல இருந்தது. பரிசோதனை முடிந்ததும் அவர் என் தோளில் தட்டி என்னுடைய இத்தனை கால அனுபவத்தில் இந்த சிகிச்சைக்கு ஒத்துழைத்த top 3 நபர்களில் நீயும் ஒருவர் என்றார். ஆனால் எனக்கு மட்டும்தான் தெரியும் என் தேவாதி தேவன் என்னுடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு அந்த படுக்கைக்குச் சென்றார் என்று! ... இதிலும் என் தேவன் உயிர் கொடுத்தார். சமுதாயத்தில் பரவும் அத்தனை கிருமித்தொற்றும் என்னை சந்திக்காமல் போகாது. கொரோனா உட்பட அனைத்தும்! ஆனாலும் கடந்த 15 ஆண்டு காலமாக என் தேவன் என்னை கண்மணியைப் போல பாதுகாத்து வருகிறார்.
2020 முதல் 4 வருடங்களாக கிராம மிஷனெரி இயக்கத்தில் மீடியா துறையில் ஊழியம் செய்யும்படி கர்த்தர் கிருபை பாராட்டினார். இந்த சூழ்நிலையில் மீண்டும் என் உடல் பலவீனமானது. என்னை பரிசோதித்த டாக்டர் என்னிடம் உன் தாயாரது கிட்னியும் செயலிழந்து விட்டது, இனிமேல் உன் வாழ்க்கையில் டயாலிசிஸ் ஒன்று தவிர வேறு ஒரு வழியும் இல்லை என்றார். என் மனதில் பல கேள்விகள் கவலைகள். இதை யோசித்துக் கொண்டிருக்கையில் என் கழுத்தில் பெரிய ஊசியை வைத்து டயாலிசிஸிற்காக மீண்டும் ஆப்ரேஷன் செய்துவிட்டனர். அந்த மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவில் வேலை செய்யும் பிரதர் லாரன்ஸ், "பிரவீன் இந்த வலி வேதனை எல்லாம் தாங்க முடியாமல் இருந்தாலும், நரகத்திற்கு போவதை காட்டிலும் இது பரவாயில்லை" என்றார். என் இருதயம் கொஞ்சம் ஆறுதல் அடைந்தது. இப்பொழுது என் விசுவாசம் எப்படி இருக்கிறதென்றால், என்னுடைய எல்லா சூழ்நிலைகளிலிருந்தும் தேவன் என்னை விடுவிப்பார். அப்படி விடுவிக்காமல் போனாலும் கர்த்தரே எனக்கு தேவன்! இரத்த சுத்திகரிப்பிற்காக வாரம் இருமுறை மருத்துவமனைக்கு போகும் போதெல்லாம் என்னைப்போல உள்ள நோயாளிகளுக்கு கர்த்தரை பற்றி சொல்ல தேவன் எனக்கு கிருபை செய்திருக்கிறார்.
நம் தேவன் நம் பிரச்சனையை காட்டிலும், வியாதியை காட்டிலும் பெரியவர். நமக்கு வரும் துன்பமோ, பாடுகளோ, வேதனையோ, வியாதியோ அவருடைய அன்பை விட்டு பிரிக்காது. என் உள்ளத்தில் அடிக்கடி தொனிக்கும் வார்த்தைகள், இருப்பது ஒரு உயிர் போவது ஒரு முறை அது இயேசுவுக்காக போகட்டுமே! சூழ்நிலை எவ்வளவு மோசமா இருந்தாலும் என்னால் இயன்றதை தேவனுக்காக செய்து கொண்டே இருக்கிறேன். தேவன் மீது உண்மையாய் அன்பு கொண்டிருக்கிறவர்களை எந்த பிரச்சனையும், பாடும், வியாதியும் அவருடைய அன்பை விட்டுப் பிரிக்கவே முடியாது. வாழ்க்கை எவ்வளவு தான் கடினமாக இருந்தாலும், நம்மை வாழ வைத்திருக்கிற தேவன் நம்மோடு தான் இருக்கிறார் கலங்காதீர்கள்.
ஜெபக்குறிப்பு:-
7 ஆயிரம் மிஷனெரிகள், 1 லட்சம் கிராமங்கள் என்கிற இலக்கை அடைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864