By Village Missionary Movement
Thursday, 27-May-2021இன்றைய தியானம்(Tamil) 27-05-2021
நோக்கிப்பார்
“அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.” – சங்கீதம் 34:5
என் வீட்டிற்கு அருகில் சூரியகாந்தி தோட்டம் ஒன்று உள்ளது. அதில் ஒரு அதிசய காட்சியை நான் பார்ப்பதுண்டு. சூரியகாந்தி பூ பூத்ததும் அதிகாலையில் சூரியன் உதிக்கும் திசையினைப் பார்த்து இருக்கும். சூரியன் நகர்ந்து நேராக வரும்போது அந்தப் பூவும் நேராக மேல்நோக்கி இருக்கும். மாலை நேரம் நெருங்கி சூரியன் மறையும்போது பூக்கள் அனைத்தும் மேற்கு திசையை நோக்கி இருக்கும். என்ன ஒரு அதிசயம், பாருங்கள்! இயற்கையின் மூலம் தேவன் ஒரு படிப்பினையை நமக்கு கற்றுத் தருகிறார். அது என்ன? நாமும் மாறும் உலகத்தையோ, நிறம் மாறும் மனிதர்களையோ நோக்காமல் ஆண்டவரையே நோக்கி வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
இதை நன்கு உணர்ந்த சங்கீதக்காரன் எனக்கு ஒத்தாசை வரும் பர்வதமாகிய உமக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன் உம்மிடத்திலிருந்து மாத்திரமே எனக்கு உதவி வரும் என்று கூறுகிறார். அது மாத்திரமல்ல, இன்னும் தன்னை தாழ்த்தி, ஆண்டவரைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார். வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருப்பதைப் போல, எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரங்கும் வரை எங்கள் கண்கள் உம்மையே நோக்கியிருக்கிறது என்று கூறுகிறார். அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை என் தேவனை நோக்கிப் பார்த்தால் நான் ஒருபோதும் வெட்கமடைவதில்லை என்பதே. தேவனை நோக்கிப் பார்ப்பதென்றால் என்ன? ஜெபிப்பது! ஆம், “ஒவ்வொரு நாளையும் திறக்கும் திறவுகோலாகவும், இரவை பூட்டும் பூட்டுமாகவும் ஜெபம் இருக்க வேண்டும்” (Prayer is the Key for the day, Lock for the night). இப்படி நாம் தேவனை நோக்கிப் பார்க்கும்போது நாம் உயர்த்தப்படுவோம்! தாவீது அந்தி, சந்தி, மத்தியான வேளைகளில் தேவனை நோக்கிப் பார்த்தார், தானியேல் பாபிலோனில் இருந்தாலும் எருசலேமை பார்த்து மூன்று வேளையும் ஜெபித்தார். இவர்கள் வாழ்வு உயர்த்தப்பட்டது. ஜெயமாய் மாறியது.
இதை வாசிக்கின்ற பிரியமானவர்களே! இந்த பூவைப் போல், நாமும் நீதியின் சூரியனாகிய இயேசுவை நோக்கிப் பார்த்தே வாழக்கற்றுக் கொள்வோம். அதுவே நமக்கு பாதுகாப்பு! அதுவே நமது வாழ்வு செழிக்க வழி! “ஜெபம் மேலே செல்ல செல்ல ஆசீர்வாதம் கீழே வரும்”
“Prayer goes up and Blessings Come down”
- Mrs. ரூபி ஜெபராஜ்
ஜெபக்குறிப்பு:
கழுதைகள் கையேடு என்று ஊழியர்களுக்காக வெளியிடப்படும் மாத இதழ் தவறாமல் அச்சடிக்கப்பட, ஊழியர்களுக்கு பிரயோஜனமாய் காணப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250