By Village Missionary Movement
Thursday, 10-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 10.07.2025
நன்மைகள் குறைவுபடாது
"...கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது" - சங்கீதம் 34: 10
மிஷனெரி ஊழிய ஸ்தாபனமொன்றில் பணியாற்றிய மிஷனெரியோடு நான் திருமணத்தில் இணைந்தேன். மிஷனெரிகள் கிராமங்களில் தங்கி ஊழியம் செய்ய வேண்டும் என்பது நிர்வாகக் கட்டளை. தேவ கட்டளையுடன் நிர்வாகத்தின் கட்டளையையும் ஏற்றவர்களாக மிகச்சிறிய மண் வீட்டில் அதாவது சாணியால் மெழுகிய வீட்டில் வாழ்ந்து வந்தோம். 1990 ஆம் ஆண்டுகளில் சரியான கழிப்பறை வசதி, குளியலறை இல்லாத நிலையில் வீட்டின் முன் பகுதியில் ஓலைத் தட்டிகளை வைத்து குளியலறையும், வீட்டினுள் உடை மாற்றும் அறை, சமையலறையும் அமைத்திருந்தேன்.
நான் திருமணத்திற்கு முன் மிஷனெரிகளால் உருவாக்கப்பட்ட சிறந்த பள்ளி விடுதிகளில் வார்டனாக பணியாற்றி மிக வசதியாக வாழ்ந்திருந்த எனக்கு, இந்த வாழ்க்கை மிகுந்த சவாலாகவே இருந்தது. ஒரு நாள் என் காலைக்கடனை முடிக்கச் சென்ற போது, சேலை முள்ளில் சிக்கி மிகவும் அவதியுற்றேன். கண்களில் கண்ணீர், இந்த வாழ்க்கைத் தரத்தோடு ஊழியத்தை தொடர வேண்டுமா? என்ற கேள்வி! அப்போது தேவன் லூக்கா 9:62 ஐ என் கண் முன்னால் காட்டி, கலப்பையின்மேல் கை வைத்த நீ தேவராஜ்யத்துக்குத் தகுதியற்றவளாக மாறலாமா? என வசனத்தின் மூலம் இடைப்பட்டார்.
எங்கள் ஊழியத்தில் மாத வருமானம் 700 ரூபாய் மட்டுமே! வரும் காணிக்கைகள் ஸ்தாபனத்துக்குரியது. ஒரு நாள் என் கணவர் பெங்களூரில் பைபிள் காலேஜில் கடைசி ஆண்டு படிக்கும் மாணவர்கள் 15 பேர் நம் பணித்தளத்தை பார்வையிட, நம் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு நீதான் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்றார்கள். எங்கள் வீட்டில் இருப்பது ஒரு மண்ணென்ணெய் ஸ்டவ் மட்டுமே.
விருந்தினர்கள் வருகைக்கு முந்தின நாள் மாலையில், விசுவாசிகளில்லாத பக்கத்து ஊரிலிருந்த ஒரு தாயின் மூலம் அரிசியும், தேங்காய் மற்றும் பணமும் கிடைக்கப்பெற்றேன். இந்த சிறிய ஸ்டவ்வில் சமைக்க முடியுமா? என்று திகைத்து, மலைத்துப் போயிருந்த எனக்கு சண்முகத்தாய் என்ற வாலிப மகள் மிகப்பெரிய பானையில் சோறு சமைத்துக் கொடுத்தாள். அம்மா தந்த பணத்தில் மட்டன் வாங்கி மிக நேர்த்தியாய் விதவிதமாக சமைத்துக் கொடுத்தேன். தேவன் எங்கள் தேவைகளை மிக அற்புதமாய், ஆச்சரியமாய் சந்தித்தார். நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர் நம் தேவன். எந்தக் குறையும் இல்லாமல் இந்நாள் வரை எங்களையும், பிள்ளைகள், பேரக்குழந்தைகளையும், ஊழியங்களையும் ஆசீர்வதித்து வருகிறார்.
அன்பானவர்களே! அவரையே நம்பியிருக்கிற உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் குறைவு வராது, உங்கள் சந்ததிக்கு ஒரு நன்மையாகிலும் குறைவுபடாது. இப்போதிருக்கிற சூழ்நிலையைக் கண்டு கலங்காதீர்கள். கர்த்தர் உங்களோடு இருக்கிறார்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:-
ஆமென் வில்லேஜ் டி.வி சாட்டிலைட் டி.வி யாக மாற்றப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864