By Village Missionary Movement
Tuesday, 08-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 08.07.2025
கண்ணின் மணிபோல் காப்பவர்
"...அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனைத் தமது கண்மணியைப்போல காத்தருளினார்" - உபாகமம் 32:10
நான் ஆண்டவரை அறியாத குடும்பத்தில் பிறந்து, முனியசாமி என்று பெயரிடப்பட்டு, விக்கிரக வழிபாட்டில் வளர்ந்தவன். என்னுடைய கிராமத்தில் எல்லாரும் இயேசுவை விசுவாசித்தாலும் என்னுடைய தகப்பனார் மாத்திரம் இயேசுவை விசுவாசிக்கவில்லை. என்னுடைய தகப்பனார் 1982 ல் மரணம் அடைந்ததும் என் வாழ்க்கை தறிகெட்டுப்போயிற்று. சூதாட்டமே என் வாழ்க்கையின் அதிகமான இடத்தை பிடித்தது. எப்பொழுது பார்த்தாலும் என் நினைவுகளில் வருவது சூதாட்டமே. சூதாட்டப் பிரியனானேன். சூதாட்டம் நடக்குமிடத்தில் குறைந்தது 10 பேர்களாவது இருப்போம். அதில் என்னைத் தவிர அனைவருமே பீடி, சிகரெட், பான் மசாலா பயன்படுத்துகிறவர்கள். இதனால் மற்றவர்கள் பயன்படுத்தும் பீடி, சிகரெட் புகையினை நானே அதிகமாக சுவாசித்து வியாதிக்குட்பட்டேன்.
ஒரு புறம் நெஞ்சு சளி, மறுபுறம் நுரையீரல் பாதிப்பு. இவைகள் இரண்டும் என் உடல் நிலையை வெகுவாக பாதித்தது. நான் இருமி துப்பும் போதெல்லாம் இரத்தக்கட்டியாக வந்தது. இதை பார்த்த உற்றார், உறவினர்கள் இவன் சீக்கிரமாக செத்து விடுவான் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். என் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைய ஆரம்பித்தது. இந்த நேரத்தில் ஒரு கிறிஸ்தவ நண்பன் என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தான். என் நிலைமையை பார்த்து உடனே என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
பின்பு அவனது வீட்டிற்கு அழைத்து வந்தான். அவனது வீட்டின் அருகில் இருந்த ஒரு கிறிஸ்தவ அம்மா என்னிடம் நலம் விசாரித்து, எனக்கு இயேசுவை குறித்து சொன்னார்கள். இயேசு அவரிடம் வந்த அனைவரையும் சுகப்படுத்தினார், என்று இந்த வசனத்தை என்னிடம் சொல்லி, அவரிடம் நீ "இயேசப்பா, எல்லாரும் என்னை சீக்கிரம் செத்துப் போய்விடுவான் என்கிறார்கள். நான் உம்மை நம்புகிறேன் இயேசப்பா, நான் உயிர் வாழணும், சாகக்கூடாது எனக்கு உதவி செய்யுங்கப்பா" என்று கேள். அவர் உன்னை இந்த வியாதியிலிருந்து காப்பாற்றி, உன் மூலமாக அநேகமாயிரம் மக்களுக்கு அவர் யார் என்பதை வெளிப்படுத்துவார் என்றார்கள். நான் அப்படியே இயேசப்பாவிடம் 1987 ஆம் ஆண்டு நவம்பரில் கேட்டேன். அந்த வருடம் தொடங்கி இந்த வருடம் 2025 வரை எனக்கு வந்த எல்லா ஆபத்துக்களிலிருந்து என்னைக் கண்ணின் மணி போல் காத்து வருகிறார். போதகராக ஊழியம் செய்யும் கிருபையையும் கொடுத்தார்.
எனக்கன்பானவர்களே! எனக்கு வியாதியிலிருந்து சுகமளித்து, இம்மட்டும் ஜீவனைக் கொடுத்து வருகிறவர், உங்களது கொடிய வியாதியிலிருந்து விடுதலை கொடுத்து, உங்கள் மூலமாகவும் இயேசு மகிமைப்பட வல்லவராயிருக்கிறார். இயேசுவிடம் வாருங்கள், எல்லா வியாதி, வறுமை நீங்கி ஆசீர்வாதம் பெறுங்கள். கர்த்தர் இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!
- Pr. S. A. இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:-
தொற்காள் தையல் பயிற்சி திட்டத்தின் மூலம் அநேக பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாக ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864