By Village Missionary Movement
Wednesday, 26-May-2021இன்றைய தியானம்(Tamil) 26-05-2021
அற்பமாய் எண்ணாதிருப்போம்
“இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;…” – மத்தேயு 18:10
பொதுவாகவே நாம் நம்மை விட வயதில், படிப்பில், செல்வாக்கில் குறைந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க நம் ஜென்ம சுபாவம் இடம் கொடாது. எளிதில் அவர்களை நம்பி எந்த பொறுப்பையும் கொடுப்பதில்லை. நேற்று முளைத்த காளான் என்று சொல்லி அவர்களுடைய திறமையைப் பாராமல் எளிதில் அற்பமாய் பேசி விடுகிறோம். ஆனால் வேதம் “ஒருவரையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” என்று நம்மை எச்சரிக்கிறது. 18 வயது கூட நிரம்பாத வாலிபர் ஒருவர் உலகப்பிரசித்திப் பெற்ற டி.எல். மூடியின் சிகாகோ நகர ஆலயத்தில் பிரசங்கிக்க விரும்புவதாக கூறினார். மூடியோ இளம் வாலிபராய் அவர் இருப்பதினால் அவரை ஏற்றுக்கொள்ள யோசித்து தட்டிக் கழித்தார். ஆனால் தேவதிட்டத்தின்படி பல மாதங்களுக்கு பிறகு மூடியின் சபையில் அவர் பிரசங்கித்தார். அவரின் பிரசங்கத்தைக் கேட்ட அநேகர் தங்களது பின்மாற்ற வாழ்விலிருந்து மனம் திரும்பினர். டி.எல். மூடியும் கண்ணீரோடு அந்த பிரசங்கத்தை கேட்டார். அதன்பிறகு இனி யாரையும் அற்பமாய் பார்க்க போவதில்லை என்று முடிவு செய்தார்.
வேதத்திலும் இப்படி சில வாலிபர்கள் நெருங்கின உறவுகளாலே அற்பமாய் எண்ணப்பட்டார்கள். யோசேப்பின் சொப்பனமும், அவனது பேச்சும் அவனது சகோதரர்களுக்கு அற்பமாய் காணப்பட்டது. தாவீதும் யுத்த களத்திலேயுள்ள தன் சகோதரர்களால் அற்பமாய் பேசப்பட்டான். ஆனால் தேவன் இவர்களைக் கொண்டு பெரிய காரியங்களை செய்தார் என்பது நாம் அறிந்த உண்மை. அன்று பரிசேயனும், ஆயக்காரனை அற்பமாக எண்ணினான். நான் இவனைப் போலெல்லாம் இல்லை என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். ஆனால் தேவனின் பார்வையில் ஆயக்காரனே விசேஷித்தவனாக தோன்றினான்.
இன்று நம் அலுவலகத்திலோ, சபையிலோ, குடும்பத்திலோ மற்றவர்களை நாம் அற்பமாய் எண்ணலாம். நம் செய்கைகளினாலோ, பேச்சினாலோ, பார்வையினாலோ, நான் உன்னை விட உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்கிறோமா? இது தேவனுடைய பார்வையில் பாவமே! “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். “ (பிலிப்பியர் 2:3) என்றல்லவா வேதம் கூறுகிறது! என்னை விட்டால் இதை செய்வதற்கு யாருமில்லை என்று நினைக்கிறோமா? தேவனால் கழுதையைக் கொண்டு பேச வைக்க முடியும் என்பதை நாம் அறிய வேண்டும்.
நண்பர்களே! கிறிஸ்து இயேசுவின் சிந்தை நம் ஒவ்வொருவருக்கும் இருக்குமானால் நாம் யாரையும் அற்பமாய் எண்ணமாட்டோம். படிக்காத நம் தாய் தகப்பன்மாரை அற்பமாய் எண்ணாதிருப்போம். நம்முடன் இருக்கும் திறமை குறைந்த சகோதர சகோதரிகளை அற்பமாய் எண்ணாதிருப்போம். சபையில் ஆவிக்குரிய வாழ்வில் குறைந்து இருக்கும் விசுவாசிகளை அற்பமாய் எண்ணாதிருப்போம். கிறிஸ்துவின் சிந்தையே நம்மில் இருக்கக்கடவது. மற்றவர்களை மேன்மையாய் எண்ணுவோம். அப்போது கர்த்தர் நம்மை உயர்த்துவார்.
- Bro. ஹனீஷ் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
மோட்சப் பயணம் தின தியான இதழை அச்சடிப்பதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250