By Village Missionary Movement
Friday, 04-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 04.07.2025
முன்குறித்தவர்
"எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்..." - ரோமர் 8:30
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நானும், என் அண்ணனும், தங்கையும் கிறிஸ்தவ ஒழுங்கின்படி வளர்க்கப்பட்டோம். என் அண்ணன், தன் நண்பர்களுடன் நீச்சல் கற்றுக் கொண்ட போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டான். அதனால் என் பெற்றோர், என்னை வீட்டிற்கு வெளியே அனுப்பாமல் மிகவும் கண்டிப்புடன் வளர்த்தனர். ஆனாலும் என் நண்பர்களுடன் சேர்ந்து சினிமா பார்க்கும் பழக்கத்தில் இருந்தேன்.
ஆலயத்திற்கு தவறாமல் சென்று, ஆலயப் பணிகளையும் செய்வேன். இரட்சிக்கப்படும் முன்பே சிறுபிள்ளைகளுக்கு கதை, வசனம், பாடல் சொல்லிக் கொடுப்பேன். சினிமாவை பார்க்கக் கூடாது என்று தீர்மானம் எடுத்தாலும் என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஒரு நாள் சினிமா பார்க்கச் சென்றுகொண்டிருந்த போது, ஆலயத்திலிருந்து ஒரு பாடல் சத்தம் கேட்டேன், "காலத்தை அறிந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே". இதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வந்தது. ஆனாலும் சினிமா பார்க்கச் சென்றேன். சினிமா படம் முழுவதும் பார்க்க முடியாமல், பாதியிலேயே எழுந்து வந்து விட்டேன். அதன் பின் இரவில் நடக்கும் கன்வென்ஷன் கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். சாது செல்லப்பா அவர்கள் கூட்டத்தில் என் பாவங்களை அறிக்கை செய்து இயேசுவுக்கு என்னை முழுவதும் ஒப்புக்கொடுத்தேன்.
படித்து முடித்தவுடன் என் வீட்டிற்கு அருகாமையிலுள்ள ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். இரவில் கம்பெனிக்குச் சென்றால், அங்கேயே தூங்கி விடுவேன். ஒரு நாள் வழக்கம் போல் அதிகாலை 1 மணிக்கு ஜெபம் செய்யும் போது, பிரத்தியட்சமாய் ஒரு சத்தத்தைக் கேட்டேன், "பெத்தேலுக்குப் போ" என்று. அந்த சத்தத்தைக் கேட்டதும் என்னால் மீண்டும் தூங்க முடியவில்லை. நான் சேலம் மாவட்டத்திலுள்ள மிஷனெரி வளாகமான பெத்தேலுக்கு ஒரு முறை FMPB மாநில முகாமிற்குச் சென்றிருந்தேன். அப்போது என்னை முழுநேர ஊழியத்திற்கு ஒப்புகொடுத்திருந்தது என் ஞாபகத்திற்கு வந்தது. உடனே அதிகாலையிலேயே புறப்பட்டு பெத்தேலுக்குச் சென்று, தேவ சத்தத்தை அங்குள்ள Sam அண்ணனிடம் கூறி, அவர்கள் மூலம் வேதாகமக் கல்லூரியில் சேர்ந்தேன். தேவன் தம்முடைய ஊழியத்திற்கென்று என்னை முன்குறித்திருக்கிறார் என நிச்சயித்துக் கொண்டேன். 1979 ஆண்டிலிருந்து 1989 ஆம் ஆண்டு வரை FMPB Missionary ஆக பீஹார், U.P டெல்லி ஆகிய பகுதிகளில் பணியாற்றினேன். 1986 ல் திருமணமான பின், குடும்பமாக Bihar -ல் உள்ள மால்டோ இன மக்கள் மத்தியில் பணியாற்றி, அதன் பின் டெல்லியிலும், விஷ்வவாணி ஊழியத்திலும் பணியாற்றினோம். ஓய்வு பெற்ற பின் VMM- ல் இணைந்து குடும்பமாக ஊழியம் செய்து வருகிறோம். இங்கு ஓய்வுபெற்ற மிஷனெரிகளுக்கு நலத்திட்ட இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பை கர்த்தர் கொடுத்துள்ளார்.
நீங்கள் தேவனால் முன்குறிக்கப்பட்ட பாத்திரமா? அவருடைய அழைப்பின் சத்தத்தை கேட்டும் கீழ்ப்படிய மனதற்று இருக்கிறீர்களா? இன்றே ஆண்டவரின் சத்தத்திற்கு கீழ்ப்படியுங்கள். அநேகருக்கு ஆசீர்வாதத்தின் பாத்திரமாய் மாற ஒப்புக்கொடுங்கள்.
- Rev. D.செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:-
Day Care Centre லுள்ள பிள்ளைகளைத் தாங்கும் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864