By Village Missionary Movement
Thursday, 26-Jun-2025இன்றைய தியானம்(Tamil) 26.06.2025
ஆத்துமாவின் விலை
"...ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்” - நீதி. 11:30
மாவீரன் அலெக்ஸாண்டர் மரண தருவாயில் தனது இறுதி ஆசையாக மூன்று காரியங்களைக் கூறினார். முதலாவதாக தனது சவப்பெட்டியை தலைசிறந்த மருத்துவர்கள் தூக்க வேண்டும். இரண்டாவதாக தான் சேர்த்த தங்கத்தையும், விலையுயர்ந்த பொருட்களையும் இறுதி ஊர்வலத்தில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும். மூன்றாவதாக தன் கைகள் சவப்பெட்டியின் வெளியே விரித்தபடி வைக்க வேண்டும் என்றார். அதற்கு தளபதி அதை விவரிக்கும்படி கேட்டார். அவருக்கு பதிலளித்த அலெக்ஸாண்டர்," தலை சிறந்த மருத்துவர்களாலும் கூட என் மரணத்தை தடுக்க முடியவில்லை. சேகரித்த பொருட்கள் அனைத்தும் பூமிக்கே சொந்தமாயின. வெறுங்கையோடு இந்த உலகிற்கு வந்த நான் ஒன்றும் கொண்டுப் போகவில்லை" என்பதை உலகத்திற்கு காட்டவே அப்படிச் சொன்னார். ஆம், பூமியில் மேன்மையாக எண்ணப்படுவது, சம்பாதித்தது எதுவும் நாம் மரிக்கும் போது கூட வருவதில்லை. இன்றைய வேதபகுதியில் இது போன்ற சம்பவத்தை வாசிக்கிறோம்.
ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன் தன் தானியங்களைச் சேர்த்து வைக்க இடமில்லை. எனவே களஞ்சியங்களை இடித்து பெரிதாகக் கட்டி, அங்கே சேர்த்து வைத்து, பின்பு என் ஆத்துமாவே நீ இளைப்பாறி புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று தன் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், தேவன் ஐசுவரியவானை நோக்கி: மதிகேடனே உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும் அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.
அருமையானவர்களே! நம் பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வைக்க ஆண்டவர் நம்மை வலியுறுத்துகிறார். பரலோகத்திற்கு பொக்கிஷமாக ஆத்துமாக்களை கொண்டு சேர்க்கலாம். என்ன விலை கொடுத்தாலும் பாவமன்னிப்பையும், நித்திய ஜீவனையும் யாராலும் கொடுக்க முடியாது. இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் இயேசு அவைகளை இலவசமாக நமக்குக் கொடுத்திருக்கிறார். பரலோகத்திற்கு செல்லும் போது ஆத்துமாக்களையும், நற்கிரியைகளையும் தவிர, நாம் ஒன்றும் கொண்டு போக முடியாது. அழிந்து போகிற உலகப் பொருட்கள் மீது மாத்திரமே நம் நம்பிக்கை, இலக்கு இருக்குமானால் நமது நிலை பரிதபிக்கப்பட்டது. ஆகவே நாம் ஞானமுள்ளவர்களாய் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவோமாக. இரட்சிப்பிற்கேற்ற வழியில் பிறரை நடத்த கருத்தாயிருப்போம். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் சுவிசேஷத்தை சொல்லுவோம். ஆண்டவர் உங்கள் பிரயாசத்தை ஆசீர்வதிப்பார்.
- Sis. எஸ்தர் செல்வி
ஜெபக்குறிப்பு:-
வாலிபர் எழுப்புதல் உபவாச முகாமில் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட வாலிபர்கள், ஒவ்வொரு நாளும் அனல் மூட்டி காத்துக்கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864