By Village Missionary Movement
Wednesday, 25-Jun-2025இன்றைய தியானம்(Tamil) 25.06.2025
பிதா திராட்சத்தோட்டக்காரர்
"நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்" - யோவான் 15:1
ஒரு குளிர் தேசத்தில், தாவரங்கள் வளர்க்கும் பெரிய வெப்பவீடு ஒன்றை பிரபல மருத்துவரான டாக்டர் வின்சென்ட் பார்வையிட்டார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. சாறு வடியும் தருவாயிலுள்ள பெரிய திராட்சப் பழக் கொத்துக்கள் தொங்கிக்கொண்டிருந்தன. அது எப்படியாயிற்று என்று அந்த டாக்டர் வீட்டின் உரிமையாளரிடம் கேட்டார். அதற்கு அவர் என் புதிய தோட்டக்காரன் திராட்சச்செடிகளை அடிமட்டத்திலிருந்து வெட்டி விட்டான். இரண்டு ஆண்டுகளாக இச்செடிகளிலிருந்து ஒரு பழக்கொத்து கூட கிடைக்கவில்லை. ஆனால் இப்போதோ நல்ல விளைச்சலை தந்திருக்கிறது என்றார்.
இயேசு கிறிஸ்து, "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" என்றார். இயேசுவோடு இணைந்து வாழ்கின்ற வாழ்க்கை மிகுந்த கனிகளை கொடுக்கச் செய்திடும். திராட்சச்செடிகளாகிய நம்மை ஒவ்வொரு நாளும் சிட்சித்து வழிநடத்துகிறார். அதாவது சிட்சை நோவையும், கஷ்டத்தையும் நமக்குத் தரும் போது, 'என் பிதா திராட்சத்தோட்டக்காரர்' என்று விசுவாசிக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்படி நாம் விசுவாசிக்கும் போது எவ்வளவு சோதனைகள் வந்தாலும் ஆறுதலின் தேவன் நமக்கு ஆறுதலைத் தருகிறார். அவர் திராட்சச்செடியாகிய நம்மை சிட்சிக்கும் போது நாம் சற்றும் சோர்ந்து போகக்கூடாது. நாம் மிகுந்த கனிகளைக் கொடுக்கும் படியாகவே அவர் நம்மை சிட்சிக்கிறார்.
அருமையான தேவஜனமே, நம் அன்றாட வாழ்க்கையிலும் அநேக வேதனையான நிகழ்வுகள் நிகழ்கின்றன. தோட்டக்காரராகிய கிறிஸ்து நம் வாழ்வை வெட்டி வீழ்த்துவது போல் தோன்றினாலும், நம்முடைய எதிர்காலம் கர்த்தருடைய கரத்தில் தான் இருக்கிறது. உலகப்பிரகாரமாக நமக்கு வருகின்ற துன்பங்கள் சேதத்தையும், தீங்கையும் விளைவிக்கக் கூடியவை. ஆனால் நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவன் அனுமதிக்கின்ற சோதனைகள் நமக்கு ஆசீர்வாதத்தையே கொண்டு வரும். ஆம், நாம் அதன்பின் மிகுந்த கனிகளைக் கொடுக்கிறவர்களாய் இருப்போம். யோசேப்பு கனி தரும் திராட்சச்செடி என்று வேதம் சொல்லுகிறது. ஆம், அவர் கனி கொடுக்கும் வாழ்வு வாழ, தேவனின் கரத்தில் அடங்கியிருந்து, வேதனையிலும் சோதனையிலும் தேவனையே சார்ந்து கொண்டது தான்! நாம் தேவனில் நிலைத்திருப்போம். மிகுந்த கனிகளைக் கொடுப்போம். ஆமென்.
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:-
ஒவ்வொரு மாநிலங்களிலும் 500 மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864