By Village Missionary Movement
Tuesday, 24-Jun-2025இன்றைய தியானம்(Tamil) 24.06.2025
ஆவியை புதுப்பித்தல்
"...உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது" - 2 கொரி. 4:16
நமது சருமத்தை வளவளப்பாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள பல விதமான களிம்புகளை பயன்படுத்தி வருகிறோம். தினமும் சரீரத்திற்கு தேவையான 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதினால், நமது உடம்பிலுள்ள கழிவுகள் வெளியேறி, இயற்கையான பளபளப்பு நமது சரீரத்திற்கு கிடைக்கும் என நம்புகிறோம். நாம் உண்கின்ற உணவில் கீரைகள், காய்கறிகள், பழங்கள், மீன் போன்றவற்றை சேர்த்துக் கொள்கிறோம். நமது மேனியை பராமரிக்க பாசிப்பருப்பு, கடலை மாவு, நல்லெண்ணெய் போன்றவற்றை உபயோகித்து குளிக்கிறோம். ஆனால் இவைகள் தற்காலிகமாகதான் நம் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.
ஆவி, ஆத்துமா, சரீரத்துடன் படைக்கப்பட்டிருக்கும் நாம், நம் ஆவிக்குரிய வாழ்வை பராமரிக்கும் போது நம்மால் பளபளப்பாக, Bright ஆக இருக்கமுடியும். தேவனுடன் நாம் அனுதினமும் உறவாடி, அவரைத் துதித்துப்பாடி, அவரது வசனங்களை விசுவாசிக்கும் போது ஆவிக்குரிய புத்துணர்வை பெற்றுக்கொள்ளலாம். நாம் அனுதினமும் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் நம்மை சோர்வடையச் செய்யலாம். ஆனால், அதிசீக்கிரத்தில் நீங்கி விடும் இந்த இலேசான உபத்திரவம் என்ற வசனம் நம்மை உயிர்பித்து சந்தோஷிப்பிக்கிறது. எனவே நம்முடைய உள்ளான ஆத்துமா புத்துணர்வு அடைய அவரை அண்டிக்கொள்வது தான் ஒரே வழி.
ஆகவே பிரியமானவர்களே! என் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் என்ற இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, நம்பிக்கையுடன் நமது கவலைகளையெல்லாம் அவரிடம் ஒப்படைத்து விடுவோம். பரிசுத்த ஆவியானவர் எனக்குக் கொடுக்கிற ஆவியின் கனியாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம் (கலாத். 5:22,23) என் வாழ்வில் வெளிப்பட வேண்டும் என்று ஜெபிப்போம். அப்போது நம்முடன் வாசம் பண்ணும் ஆவியானவர் நம்மை செப்பனிட்டு, சீர்ப்படுத்துவார். நாம் பொலிவுடனும், முக மலர்ச்சியுடனும் காணப்பட உதவி செய்வார். எனவே இந்த செப்பனிடும் ஆண்டில், ஒவ்வொரு நாளும் அவர் நம்மை புதுப்பிக்க இடம் கொடுத்து, ஆவிக்குரிய வாழ்வில் பளப்பளப்பாக காணப்படுவோம். நம்மை பிரகாசமாய் மாற்றுகிற தேவனிடம் நம்மை முழுமையாய் ஒப்படைப்போம். ஆண்டவர் தாமே நம்மை கரம் பிடித்து வழிநடத்துவாராக! ஆமென்
- Mrs. பியூலா
ஜெபக்குறிப்பு:-
நம் வளாகத்தில் ஜெபகோபுரம் கட்டப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864