By Village Missionary Movement
Monday, 16-Jun-2025இன்றைய தியானம்(Tamil) 16.06.2025
மன்னிப்பே பரம பொக்கிஷம்
"உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்" - மத். 6:21
"பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்று இயேசு சிலுவையிலே கூறினார். அவருடைய ஊழியத்தின் பாதையில் அநேகருடைய பாவங்களை மன்னித்தார். நமக்கு இயேசு கற்பித்தது "மனுஷர் தப்பிதங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிப்பார்"(மாற்கு 11:25-26). மேலும் யோவான் 20:23 ல் "எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்". நாம் மன்னிக்கப்படும்படி பிறருடைய பாவங்களை மன்னிக்க வேண்டும்.
இரட்சிக்கப்பட்ட ஒரு நபர் தனது சாட்சியை கூறும் போது, நான் இயேசுவை ஏற்றுக் கொண்ட துவக்கத்தில், மற்றவர்கள் செய்த தவறை மன்னிக்க முடியாமல், தேவனிடம் முறையிட்டு, தேவன் அவர்களை தண்டிப்பதை சாட்சியாக கூறுவேன். அப்போது "நீங்கள் இன்ன ஆவி உள்ளவர்கள் என்பதை அறியாதிருக்கிறீர்களா?" என்ற இயேசுவின் வார்த்தை என்னை சிந்திக்க வைத்த போது, அவர்களுக்காக கடவுளிடம் மன்னிப்பை வேண்டியபோது, அவர்கள் தண்டிக்கப்படவில்லை. இதை அறிந்த ஒருவர், இப்பொழுது அப்படிப்பட்ட சாட்சிகளை நீங்கள் சொல்வதில்லையே. உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் தவறு செய்து விட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு நான் பிள்ளைகளை சபித்த எலிசாவாய் இருந்த என்னை எதிரிகளுக்கும் விருந்து படைத்து அனுப்பும் எலிசாவாக என்னை மாற்றிவிட்டார் என்றேன். இதுவே பரலோக குடியிருப்புகளை வாஞ்சிக்கும் மக்களின் ஜீவனுள்ள சாட்சி.
தன் சொந்த மாம்சத்தை பகைத்தவன் ஒருவனும் இல்லையே. சகோதரனை பகைக்கிறவன் மனுஷ கொலைபாதகன் என்று வேதம் சொல்லுகிறது. இன்று நாம் நமது சகோதரர்களையும், சகோதரிகளையும் சொந்த கிறிஸ்துவின் சரீரமாக கருதுவதில்லை. FMPB யிலுள்ள நவநீதர் அண்ணன், தன் பெற்றோர்களை கொலை செய்த மனிதனை மன்னித்து, அவர்கள் குடும்பத்தையும் இரட்சிப்பின் பாதையில் நடத்தியுள்ளார்.
இன்று நாம் நம்மை பகைக்கிறவர்களை பார்த்தாலே எரிச்சலடைவோம் என்றால் காயீனாகவே நாம் மாறிவிட்டோம் என்பது தான் உண்மை. எனவே தேவன் நமக்கு மன்னித்தது போல நாமும் நமக்கு தீமை செய்தவர்களை மன்னிப்போம், பரம பொக்கிஷம் சேர்ப்போம். ஆமென்.
- Rev.D.செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:-
இந்தியா முழுவதிலும் இவ்வாண்டில் 1000 மிஷனெரிகள் உருவாக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864