By Village Missionary Movement
Saturday, 14-Jun-2025இன்றைய தியானம்(Tamil) 14.06.2025
வேதத்தை தியானித்தல்
"...இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" - சங்கீதம் 1:2
விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் பலா மரம் ஒன்றை நட்டு வைத்தார். தினமும் அதற்கு தண்ணீர் ஊற்றியும், அவ்வப்போது உரம் வைத்தும் வந்தார். மரத்தை ஆடு, மாடுகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அதற்கு வேலி அடைத்தார். தினமும் ஒரு முறையாவது அந்த பலாமரத்தை பார்த்து விட்டு, அதன் வளர்ச்சியை கண்டு சந்தோஷமடைவார். மரம் நன்றாக வளர்ந்ததைப் பார்த்த விவசாயிக்கு மிகுந்த மகிழ்ச்சி. விரைவில் பலாப்பழம் சாப்பிட போகிறோம். இந்த மரம் பூத்து, காய்த்து, பழம் தரப்போகிறது என்று நாட்களை எண்ணிக்கொண்டிருந்த விவசாயிக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அந்த மரத்தினை வளர்த்த அவர் மரத்தின் மீது வெறுப்பு கொண்டு அந்த மரத்தை வெட்டி வீழ்த்த மனதில் எண்ணம் கொண்டார்.
தனது ஆதங்கத்தை நண்பரிடம் கூறி, மறுநாளே மரம் வெட்ட ஆள் தேவை என்று அவரிடம் உதவி கேட்டார். நண்பர் அவரிடம் சற்று பொறுமையோடு இருக்க சொல்லிவிட்டு ஒரு ஆலோசனையை கூறினார். நண்பர் சொன்ன ஆலோசனையின் படி சற்று தள்ளி இருந்த வாய்க்காலை மரத்திற்கு நேராக திருப்பிவிட்டர். ஒரு நாள் அந்த மரத்திலிருந்து பூ பூத்து, காய் காய்த்தது. சில நாட்களுக்குப் பின் பழம் பழுத்து தொங்கியது. விவசாயி தனது நண்பனை சந்தித்து மரத்தில் பழம் காய்த்து விட்டது இனிமேல் அதை வெட்டப் போவதில்லை என்று கூறினார். அனால் எதற்காக வாய்க்காலை மரத்தின் பக்கத்தில் கொண்டு போக சொன்னீர்கள் என்று தன் நண்பனிடம் கேட்க, நண்பர் சொன்னார், " மரம் சிறிதாய் இருந்த போது அதற்கு கொஞ்சம் தண்ணீர் போதுமானதாக இருந்தது. ஆனால் அது பெரிய மரமாக வளர்ந்த பின்பும் அதே அளவு தண்ணீரை மட்டுமே மரத்திற்கு கொடுத்து வந்ததை அறிந்து வாய்க்காலை அந்த மரத்திற்கு நேராக கொண்டு போகச் சொன்னேன்" என்றார். விவசாயி தன்னுடைய தவறை உணர்ந்தார். இருவரும் பலா மரத்திலிருந்த பலாப்பழத்தை பறித்து உண்டனர்.
ஆம் அன்பு நண்பர்களே! நானும் என்னால் இயன்ற முயற்சிகள் அனைத்தையும் செய்து விட்டேன், இது என்ன வாழ்க்கை? பலன் ஒன்றுமே இல்லை என்கின்ற விரக்தியோடு இருப்பீர்களானால் இன்று ஆண்டவர் உங்களுக்குச் சொல்லுகிற வார்த்தை என்ன தெரியுமா? நீங்கள் என்னுடைய வேதத்தில் பிரியமாய் இருந்தால், நீர்க்கால்களின் ஓரம் நடப்பட்ட மரத்தைப் போல் கனி கொடுப்பீர்கள். உண்மைதான், பாலைவனமாய் இருக்கின்ற உங்கள் வாழ்க்கையை சோலைவனமாய் மாற்றுவதற்கு தேவன் ஆயத்தமாயிருக்கிறார். நீங்களும் வேத வசனங்களை தியானிப்பதில் நேரத்தை செலவிடுங்கள். வாய்க்கால் உங்களை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. உங்கள் வாழ்வு நிச்சயமாய் கனி நிறைந்த வாழ்வாக மாறும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
- Bro. அனீஸ் ராஜா
ஜெபக்குறிப்பு:-
வட மாநிலத்தில் ஆலயம் இல்லாத பகுதிகளில் ஆலயம் கட்டப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864