By Village Missionary Movement
Monday, 24-May-2021இன்றைய தியானம்(Tamil) 24-05-2021
அறிமுகம் செய்வோம்
“…அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?” - ரோமர் 10:14
சினிமா ஹீரோக்களை Roll modelலாக கொண்டு ஜாலியாக வாழ்ந்தான் ஒரு வாலிபன். உலகத்தின் பொய்யான மாயையைப் பின்பற்றி அவைகளே தன்னுடைய வாழ்க்கையின் சந்தோஷம் என்றும், இவைகளே தன் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் உறுதியாய் நம்பினான் அவன். கல்லூரியில் படிக்கும்போது அவனுடன் படித்த அவனுடைய நண்பன், “நீ தேடிச் செல்வதெல்லாம் மாயையே! என்றுமே மாறாத இயேசுவைத் தேடு அவரே நித்தியமானவர்” என்று சொன்னான். ஆனால் அந்த வாலிபன் ஆரம்பத்தில் நண்பனை கேலி செய்து இயேசுவை புறக்கணித்தான். இருந்தாலும், விடாமல் இயேசுவின் அன்பைக் கூறிக்கொண்டே இருந்தான். ஒருநாள் அந்த வாலிபன், ஒரு நெருக்கமான சூழ்நிலையில் இவன் சொல்வது உண்மையாக இருக்குமோவென்று எண்ணி, ஆண்டவரை நோக்கி “இயேசுவே நீர்தான் மெய்யான தேவனென்றால் உம்மை வெளிப்ப்டுத்தும்” என்று ஜெபித்தான். அன்று இரவே தேவன் தம்மை உயிருள்ளவராக அந்த வாலிபனின் கனவில் வெளிப்படுத்தினார். பின்பு அந்த வாலிபன் ஆண்டவரைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டு பாடுகளும், போராட்டங்களும் வந்தாலும் தேவனுக்காக வைராக்கியமாய் நின்றான். பின்பு தேவ அழைப்பைப் பெற்று முழு நேர ஊழியராய் இன்றும் ஊழியம் செய்து கொண்டிருக்கிறார்.
அப்போஸ்தலனாகிய பிலிப்பு தனக்குத் தெரிந்த நபராகிய நாத்தான்வேல் என்பவரை இயேசுவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நாத்தான்வேல் இயேசுவிடம் தனக்கு இருந்த கேள்விகளையெல்லாம் ஒரு சிறுபிள்ளையைப் போல கேட்டுத் தெரிந்துகொண்டார். இயேசுவைக் குறித்து தன் மனதில் இருந்த எல்லா கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் தெளிவான பதில் கிடைத்தது. கடைசியில் அவர் இயேசுவை தேவகுமாரன் என்று சொல்லி அவரை விசுவாசித்தார். இதற்கு அடிப்படைக் கருவியாய் தேவனால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம்தான் “பிலிப்பு”
அன்பானவர்களே! இன்றும் நம்மைச் சுற்றியுள்ள ஜனங்களுக்கு இயேசுவைக் குறித்த அறியாமையும், கேள்வியும், குழப்பமும் இருக்கத்தான் செய்கிறது. தேவன் நம்மைத்தான் அவர்களுக்கு வெளிச்சமும், பதிலும், தெளிவுமாய் வைத்திருக்கிறார். முதலில் இயேசுவை அவர்களுக்கு அறிமுகம் செய்வோம். ஒருவேளை அவர்கள் இன்று நம்மை காயப்படுத்தி, கேலி செய்து, இயேசுவை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், எப்படியும் அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் இயேசு தேவைப்படுவார். அப்பொழுது நீங்கள் என்றோ ஒருநாள் பகிர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு அவர்களுக்கு உதவி செய்யும். ஆமென்.
- S. மனோஜ்குமார்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு நாளும் தியானச் செய்தியை WhatsApp, Twitter, E-mail, Facebook மூலம் வாசித்தும் கேட்டும் பயன்பெறும் மக்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250