By Village Missionary Movement
Monday, 09-Jun-2025இன்றைய தியானம்(Tamil) 09.06.2025
வித்தியாசமே இல்லை
"யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை;... தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்" - ரோமர் 10:12
ஒரு சுவிசேஷக் குழுவினர் ஒரு முறை ஆப்பிரிக்க பழங்குடி மக்களுக்கு சுவிசேஷம் சொல்லப் புறப்பட்டுப் போனார்கள். அந்த மக்கள் இவர்களை வரவேற்று மாட்டுச்சாணத்தால் மெழுகிய தரையிலே உட்கார வைத்தார்கள். அவர்கள் கல்வியறிவில்லாமல் இருந்தபடியால், ஊழியத்திற்குச் சென்ற கல்வியறிவு படைத்த, உயர் பதவியிலுள்ள இவர்களோ "எப்படி இந்த மக்களுக்குச் சுவிசேஷம் சொல்லுவது? சொன்னால் புரியாதே. புரியும் படி எப்படிச் சொல்லுவது? சொன்னால் பிரயோஜனம் உண்டா? அல்லது சொல்லாமலேயே சென்று விடலாமா?" என்று பலவாறு யோசித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது கர்த்தர் இவர்களோடு இடைபட ஆரம்பித்து, "நீங்கள் பட்டணங்களிலுள்ள படித்தவர்களுக்குப் பிரசங்கித்த பாவ மன்னிப்பு, பரிசுத்தமாகுதல், நித்தியமான வாழ்வு என்பதைக் குறித்தே எளிய நடையில் சாதாரண வார்த்தைகளால் இவர்களுக்கு போதியுங்கள். இவர்களிலும் சிலரை பரலோக சிங்காசனத்தில் நான் உட்கார வைப்பேன்" என்று பேசினார்.
எனக்கன்பான தேவஜனமே! கர்த்தராகிய இயேசுவுக்கு ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், கிறிஸ்தவன், கிறிஸ்தவன் அல்லாதவன் என்று வித்தியாசமே இல்லை. எல்லோரையும் ஒன்று போலவே இயேசு நேசிக்கிறார். மனுஷனாய்ப் பிறந்து பாவம் இல்லாதவராய் வாழ்ந்த இயேசு கிறிஸ்து, மனுஷராகிய நாமும் அவரைப் போலவே வாழ வேண்டும் என்று விரும்புகிறார். நாம் எவ்வளவு தாழ்ந்த நிலைமையில் இருந்தாலும், நம்மை இராஜாக்களோடும், பிரபுக்களோடும் உட்கார வைக்கவே இயேசு விரும்புகிறார். படிக்காத பாமரர்களாய் இருந்தாலும் பரலோக சிம்மாசனத்தில் உட்கார வைக்க இயேசு ஆயத்தமாய் இருக்கும் போது அதைத் தடுக்க யாராலும் முடியாது. சிறுபிள்ளையைப் போல, தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக் கொள்கிறவர்களைத் தடை பண்ண வேண்டாம் என்று இயேசு சொன்னாரே. "தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" என்று மாற்கு 10:14 சொல்கிறது.
ஆதலால் பட்டணங்களுக்கு மட்டுமே சுவிசேஷம் சொல்ல புறப்படும் ஊழியர்கள் கிராமங்களிலும், பட்டிதொட்டிகளிலும், படிக்காதவர்களிடமும் சுவிசேஷசம் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். மாபெரும் கல்வி மேதையான பவுலும் கூட பாமரர்களிடமும், புறஜாதிகளிடமும் அனுப்பப்பட்டார். ஆயிரங்களையும் லட்சங்களையும் கர்த்தருக்கென்று ஆதாயம் செய்தார். நாமும் எல்லோருக்கும் இயேசுவை அறிவிப்போமாக!
- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்
ஜெபக்குறிப்பு:-
நம்மோடு இணைந்துள்ள தெபோராள்கள் செய்யும் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864