By Village Missionary Movement
Friday, 06-Jun-2025இன்றைய தியானம்(Tamil) 06.06.2025
இருநண்பர்கள்
"ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை" - யோவான் 15:13
ஒரு எல்லை போரின் போது இரண்டு நண்பர்கள் போர்க்களத்தில் இருந்தனர். எதிரிகளின் படை தாக்குதல் நடத்திய போது எதிர்பாராத விதமாக ஒரு நண்பர் மீது குண்டு பாய்ந்து, காயமுற்று மரிக்கும் தருவாயில் இருந்தார். தூரத்தில் இருந்து அவரது நண்பர் இதை கண்டவுடன் தன் உயிர் நண்பனை காப்பாற்ற ஓடோடி வந்து அங்குள்ள அதிகாரியிடம் நடந்தவற்றை சொல்லி அடிப்பட்டு கீழே கிடக்கும் நண்பரின் பகுதிக்கு செல்ல முயன்ற போதோ, அவரின் மேலதிகாரி இவரை தடுத்தார். ஆனால் இவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது, போர் நடந்து கொண்டிருந்த போதும், "நண்பா! உன்னை காப்பாற்ற வருகிறேன்," என்று சத்தமிட்டு சொல்லிய படியே ஓடினார். அங்கே மரிக்கும் தருவாயில் இருந்த தன் உயிர் நண்பரை தன்னுடைய தோளின் மீது சுமந்து அதி விரைவாய் சென்றார். இதை கண்ட அந்த மேலதிகாரி உன் உயிர் நண்பன் இறந்து போய்விட்டான் என்று சொன்னதும், அதற்கு அவர் என் மடியில் தான் என் நண்பனது உயிர் பிரிந்தது என்று சொன்னார். தன் நண்பன் இறந்து போவான் என தெரிந்தும் அவரை காப்பாற்ற முயன்ற அந்த நண்பரது பாசம் எவ்வளவு உருக்கமானது.
அன்பு எவ்வளவு விலையேறப்பட்டது. அந்த அன்பை தேவன் வெளிப்படுத்தினார். இந்த உலகத்தில் வாழ்கின்ற நமக்கு வாழ்வின் இறுதிவரை சிநேகிதர்கள் தேவை. அதை தான் "நீங்கள் மாளும்போது உங்கள் நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" என்று வேதமும் சொல்கிறது. நல்ல நண்பர்கள் உயிரினும் மேலாக நேசிக்கக் கூடியவர்கள், விட்டுக்கொடுத்து வாழக்கூடியவர்கள். ஒருவருக்காக ஒருவர் பரிந்து பேசி என எப்போதும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். நண்பர்கள் கிடைப்பது எளிது. ஆனால் நல்ல நண்பர்கள் கிடைப்பது மிக கடினம். ஆனால் எப்போதும் நமக்கு உற்ற நண்பராக இருப்பவர் தான் இயேசு. அவர் நமக்காக, நம்மை இரட்சிப்பதற்காக சிலுவையில் தன் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தினார். அந்த இயேசு நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக நம்முடனே இருக்கிறார்.
எனவே தேவன் நம்மை நேசித்து நம்மேல் அன்பாயிருந்தது போல நாமும் மற்றவர்களிடம் அன்பாயிருப்போம். அநேக சிநேகிதர்களை சம்பாதிப்போம். சந்தோஷமாய் வாழுவோம்.
- P.பால் ஜெபஸ்டின் ராஜ்
ஜெபக்குறிப்பு:-
டியூஷன் சென்டருக்கு வரும் பிள்ளைகள் ஞானத்தினாலும், கர்த்தரை அறிகிற அறிவினாலும் நிரப்பப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864