Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 31.05.2025
Share:

By Village Missionary Movement

Saturday, 31-May-2025

இன்றைய தியானம்(Tamil) 31.05.2025

 

ஆதி அன்புக்குத் திரும்பு

 

"ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக;...” - வெளி. 2:5

 

வில்பர் சாப்மன் என்பவர் ஒருநாள் "ஜெபிக்கும் ஹைட்" என்பவரிடம் தனக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி இருவரும் ஒரு அறைக்குள் சென்று முழங்கால் படியிட்டனர். ஹைட், ஐந்து நிமிடமாக ஒரு வார்த்தையும் சொல்லாது முழங்காலிலேயே நின்றார். வில்பர் சாப்மனுக்கு இருதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது, வியர்வை வழிந்தது. ஆனால் இவர் தேவனோடு இருப்பதாக ஒரு உணர்வு அவருக்குள் உண்டானது. இவரது கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டேயிருந்தது. ஹைட் அவர்களின் கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்தது. சற்று நேரமானதும் "தேவனே" என்றார் ஹைட், மீண்டும் அமைதி. சிறிது நேரம் கடந்ததும் இருவரும் முழங்காலிலிருந்து எழுப்பினர். எழும்பும்போதே வில்பர் சாப்மன் தேவனுடைய வல்லமையைத் தனக்குள் உணர்ந்தார். தேவப்பிரசன்னமே இவரின் கண்களில் கண்ணீரையும் இருதயத்தில் ஒரு மாறுதலையும் கொண்டு வந்தது.

 

2007 ஆம் ஆண்டு சென்னையிலே சுமார் 3,000 பேர் கலந்து கொண்ட முகாம் ஒன்றில் நானும் கலந்து கொண்டேன். தேவ செய்தியாளர் மேடையில் வரும்போதே தேவபிரசன்னம் எங்களை நிரப்புவதை உணர்ந்தோம். மைக்கைப் பிடித்தவர், "ஜெபிக்கலாமா?" என்றார். அவ்வளவுதான், தேவ அன்பும், பிரசன்னமும் அனைவரையும் மூடிக்கொண்டது. அவரால் ஜெபிக்க முடியவில்லை. அவர் கண்களில் கண்ணீர், ஏக்கப் பெருமூச்சு விட்டார். அரங்கம் முழுவதும் நிசப்தம். கண்ணீரோடே கூட இடையிடையே அந்நிய பாஷைகளில் பேசினார். மீண்டும் அமைதி 5, 10, 15 என நிமிடங்கள் ஓடிக்கொண்டேயிருந்தன. திடீரென கூட்டத்திற்குள்ளே ஆங்காங்கே அழுகுரல்கள், குமுறல்கள், விம்முதல், ஏக்கப்பெருமூச்சுகள் கேட்டன. ஆவியானவர் ஜனங்கள் மேல் பலமாய் இறங்கினார். அநேகர் சிலுவைக் காட்சியைத் தரிசித்து, தேவஅன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அழ ஆரம்பித்தனர். சற்று நேரத்திற்குள் கூடி வந்த நாங்கள் அனைவரும் மனங்கசந்து அழுது, மீண்டும் எங்களை தேவ அன்புக்கு நேராய் திருப்பும்படியும், எங்கள் இருதயம் மீண்டும் செப்பனிடப்படும்படியும் எங்களை தேவனிடத்தில் முற்றிலும் ஒப்புக்கொடுத்தோம். இந்த கடைசி நாட்களில் தேவன் இப்படிப்பட்ட அர்ப்பணிப்பை மீண்டும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

 

இதை வாசிக்கும் அன்பரே! தேவன் நம்மைப் பற்றிக் கூறும் காரியத்தைக் கேளுங்கள். அதாவது, நீ அநேக ஊழியங்களையும், காரியங்களையும் செய்தாலும், "நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு" (வெளி. 2:4) என்கிறார். நாம் எவ்வளவுதான் ஊழியம் செய்தாலும், தேவனுடைய சமுகத்திற்குத் தினமும் ஆசையோடும், ஆவலோடும் ஓடி வந்து அவரிடம் பேசிக்கொண்டேயிருப்பதையும், அவரோடுள்ள தனிப்பட்ட ஐக்கியத்தையுமே தேவன் அதிகம் நம்மிடம் எதிர்பார்க்கிறார். மணிக்கணக்காய் தனி ஜெபம், வேதவாசிப்பு, தியானம், வசனத்தின்படி வாழுதல், இதில் நாம் குறைவு பட்டிருப்போமானால் இன்றே தேவனிடம் ஒப்புக் கொடுத்து அதை சரிப்படுத்துவோமாக!

- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்

 

ஜெபக்குறிப்பு:-

VBS ஊழியத்தின் மூலம் நாம் சந்திக்கும் சிறுவர்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al