By Village Missionary Movement
Friday, 30-May-2025இன்றைய தியானம்(Tamil) 30.05.2025
பொருத்தனையோடு ஜெபியுங்கள்
"தேவனே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்;..." - சங்கீதம் 61:5
குடும்பத்தின் வறுமை காரணமாக மேற்படிப்பைத் தொடர முடியாமல் பட்டறை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார் கார்ல் பேக்கர். தன் விதவை தாயையும், திருமணமாகாத தன் சகோதரியையும் காப்பாற்றும் நிர்பந்தத்திற்கு ஆளானார். ஆனால் அவருக்கு மேற்படிப்பு படிக்க வேண்டுமென்று ஆசை. ஆனால் வெகு ஆண்டுகளாகியும் மேற்படிப்பைத் தொடர முடியவில்லை. அப்போது கார்ல் பேக்கர் "நீர் என்னை படிக்க வைத்தால் நான் உம்முடைய ஊழியத்தைச் செய்வேன்" என பொருத்தனையோடு ஜெபித்தார். அதோடு கிடைத்த வருமானத்தில் சிறுக, சிறுக சேர்த்த 100 டாலர் கொண்டு பிலதெல்பியா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை பயில சேர்ந்தார். அப்போது முதலாம் உலகப் போர் ஆரம்பித்ததால் போரில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களின் உதவி தேவை என அரசு உணர்ந்தது. எனவே மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக தங்கும் அறை, உணவு, ஊக்கத் தொகை வழங்கினர். கார்ல் பேக்கர் இலவசமாக பயின்றார். தான் பொருத்தனை செய்தது போல் ஆப்பிரிக்கா தேசத்திற்கு மருத்துவ மிஷனெரியாக சென்றார்.
வேதத்திலும் கூட அன்னாளுக்கு குழந்தையில்லாமல் இருந்தது. அவளது சக்களத்தி அவளை விசனப்படுத்தி, மனமடிவாக்குவாள். அன்னாளோ அழுது கொண்டு, சாப்பிடாமல் இருப்பாள். கணவரின் வார்த்தைகள் ஆறுதலைத் தரவில்லை. இது வழக்கமாக இருந்தது. ஆனால் அன்னாள் கர்த்தரிடத்தில் ஒரு பொருத்தனையோடு ஜெபித்தாள். என்ன பொருத்தனை, என்னை நினைத்தருளி, எனக்கு ஒரு பிள்ளையைக் கொடும், கொடுத்தால் கர்த்தருக்கென்று கொடுப்பேன் என்பதே. என்ன ஆயிற்று கர்த்தர் அன்னாளை நினைத்தருளினார். அடைக்கப்பட்ட கர்ப்பம் திறக்கப்பட்டது. ஒரு குமாரனைப் பெற்றாள். அதே போல் அவள் தன் பொருத்தனையை நிறைவேற்றினாள். ஆம், பொருத்தனையின் ஜெபம் அன்னாளின் வாழ்வில் தடைபட்டக் காரியத்தை பெறச் செய்தது. இதை வாசிக்கும் அன்பர்களே! உங்கள் வாழ்விலும் தடைபட்ட ஆசீர்வாதங்களைப் பெற வேண்டுமா? தேவனிடம் பொருத்தனையோடு ஜெபியுங்கள்.
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் ஜெபம் வீண் போகாது. கார்ல் பேக்கர் பொருத்தனையோடு ஜெபித்தாலும் பல ஆண்டுகள் கழித்து 22 வது வயதில் மேற்படிப்பிற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் அற்புதமாய் இலவசமாய் படிக்க கிருபை செய்தார். உங்களுக்கு தாமதமாகும் ஆசீர்வாதம் நீங்கள் வியப்படையும் படியாய் இராமல், உங்களை சுற்றியுள்ளவர்கள், கேள்விப்படுகிறவர்கள் வியப்படையும் படியாயிருக்கும். ஆதலால் பொருத்தனையோடு ஜெபியுங்கள் ஆசீர்வாதம் பெறுங்கள். உண்மையாய் பொருத்தனையை நிறைவேற்றுங்கள். உங்கள் வாழ்வின் மூலம் பலர் தேவனை மகிமைப்படுத்துவார்கள். ஆமென்.
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:-
VBS ஊழியத்தின் மூலம் ஒரு லட்சம் சிறுவர்களை சந்திக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864