By Village Missionary Movement
Thursday, 29-May-2025இன்றைய தியானம்(Tamil) 29.05.2025
பொய் உதடு
"பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்;..." - நீதி. 12:22
அனனியா, சப்பீராள் என்னும் தம்பதியை பற்றி அப்போஸ்தலர் 5 ல் வாசிக்கிறோம். அவர்கள் அவர்களுடைய நிலத்தை விற்று வந்த பணத்தில் ஒரு பங்கை, அதாவது ஒரு தொகையை தங்களுக்கென்று எடுத்து வைத்துக் கொண்டார்கள். அனனியா மீதி தொகையை அப்போஸ்தலனாகிய பேதுருவினிடத்தில் எடுத்துக்கொண்டு வந்து அவருடைய பாதத்திலே வைத்தான். அது அவர்களுடைய ஆஸ்தி தான், அவர்களுடைய நிலம், அவர்களுடைய சொத்து தான், இருப்பினும் பிசாசானவன் அவர்களுடைய இருதயத்தை பொய்யின் ஆவியினால் நிரப்புகிறான். எனவே தான் ஒருவர் பின் ஒருவராக கணவன், மனைவி என இருவரும் இறந்துபோனார்கள்.
பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள். உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம் என வாசிக்கிறோம். பொய்யையும், பொய் பேசுபவர்களும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். அப்படியென்றால் நம்முடைய வாயையும், இருதயத்தையும் உண்மையினால் நிரப்புவோம். தேவன் அழைத்த அழைப்பும், கிருபை வரங்களும் மாறாதவைகள். தேவ மனுஷர்கள், தேவ ஊழியர்கள், தேவனோடு ஐக்கியத்திலுள்ளவர்களிடம் துணிகரமாய் பொய் சொல்லக்கூடாது.
கர்த்தர் வெறுக்கிற ஏழு காரியத்தில் ஒன்று பொய்நாவு. தேவனிடத்தில் பொய் சொல்லி தங்களுடைய ஆசீர்வாதங்களை இழந்த அநேகரை குறித்து வேதத்தில் முன்னெச்சரிக்கையாக எழுதப்பட்டுள்ளது. நம்முடைய இருதயம் உண்மையினாலும், நன்மையான எண்ணங்களாலும் நிரப்பப்பட நாம் வாஞ்சிப்போம். இந்த அனனியா, சப்பீராள் தம்பதிபோல சாத்தானுக்கு இடம் கொடுக்க வேண்டாம். அவர்கள் சொன்ன பொய், மரணத்தில் முடிகிறது.
எனக்கு அன்பான சகோதர, சகோதரிகளே! நாம் சாதாரண மனுஷர்தான். பிசாசுக்கு இடங்கொடாதிருங்கள் என்று வேதம் கூறுகிறது. நாம் ஒவ்வொரு நாளும், பிதாவே நான் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாமலும், அவருக்கு விரோதமான, துரோகமான செயல்கள் செய்யக்கூடாது என ஜெபிப்போம். பண ஆசை, பொருள் ஆசை, மண் ஆசை, பொன் ஆசை இவைகளெல்லாம் இல்லாதவர்களாய், இருப்பது போதும் என்கிற எண்ணத்தை நம் சிந்தையில் பதிப்போம். பொய் என்பதன் எதிர்சொல் உண்மை. உண்மையான வாழ்க்கை வாழ வாஞ்சிப்போம். "என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்" என்று மோசே சாட்சி பெற்றது போல, நாமும் சாட்சி பெற பிரயாசிப்போம். நிச்சயமாகவே ஆண்டவர் நமக்கு உதவி செய்வார்.
- D. நான்சி அதிசயமணி
ஜெபக்குறிப்பு:-
நம் வில்லேஜ் டிவியில் VBS நிகழ்ச்சிகளை பார்க்கிற சிறுவர்கள் தேவனுக்காக செயல்படுகிறவர்களாக மாற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864