By Village Missionary Movement
Saturday, 22-May-2021இன்றைய தியானம்(Tamil) 22-05-2021
மாற்றம் அவசியமே
“…உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” – ரோமர் 12:2
சுட்டிப் பையனொருவன் தன் நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒளிந்து விளையாட நல்ல ஒரு இடம் தேடினான். தேடினவனின் கண்களில் அருகில் உள்ள ஆலயம் தென்பட்டது. “ஓ, கிறிஸ்மஸ் அன்று நம்ம போன Churchதானே இது” என்று நினைத்தவன் வேகமாக உள்ளே சென்று ஒளிந்து கொள்ள முற்பட்டான். அதைப் பார்த்த அங்கிருந்த போதகர் அவனை தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்து அவனிடம் “ஆண்டவர் எங்கே?” என்ற கேள்வியை கேட்டார். சிறுவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. மீண்டும் “ஆண்டவர் எங்கே?” என்று சத்தத்தை உயர்த்திக் கேட்க அவனுக்கோ பயத்தினால் வேர்த்துக் கொட்டியது. மூன்றாவது முறையாக போதகர் அவனிடம் கோபமாக கேட்பது போல கேட்க, அவனோ ஒரே ஓட்டமாய் வீட்டிற்கு ஓடி வந்துவிட்டான். அதைப் பார்த்த அவனுடைய அண்ணன், “ஏன் தம்பி, இப்படி வேர்க்க விறுவிறுக்க ஓடி வருகிறாய்?” என கேட்டான். அதற்கு சிறுவன், “அண்ணா, நாம் மிகப் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்டோம். இந்த முறை ஆண்டவரைக் காணவில்லையாம். நாம் தான் திருடிவிட்டோம் என சந்தேகப்படுகின்றனர்” என்றான்.
இது ஒரு நகைச்சுவையான கதையாக இருந்தாலும் கூட சிந்திக்க வேண்டியது! நம்முடைய வாழ்வில் ஆண்டவர் எப்பொழுதாவது காணாமல் போனதுண்டா? நம் நடத்தையையும், வாழ்வையும் காண்கின்ற எத்தனை பேர் நம்மில் கிறிஸ்துவை காண்கிறார்கள். கிறிஸ்துவின் பிறப்பு கி.மு, கி.பி என்று உலக சரித்திரத்தையே பிரித்தது. நம் வாழ்விலும் கூட கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின் என்ற வித்தியாசம் காணப்பட வேண்டுமே! இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்ல நம் சுபாவத்திலும், ஜீவியத்திலும் மாற்றம் காணப்பட வேண்டியது அவசியம்.
எகிப்தின் அரண்மனையிலே வளர்ந்த மோசே கோபத்தினால் ஒருவனைக் கொன்றதால் பயந்து போய் தேசத்தை விட்டே ஓடிப் போனார். அதே மோசே முட்செடியில் கர்த்தரைக் கண்ட பின் தைரியம் பெற்றவனாய் மீண்டும் எகிப்திற்குச் சென்று அடிமைத்தனத்திலிருந்து ஜனங்களை மீட்டு அவர்களை வழிநடத்திச் செல்லும் தலைவனாக மாறினார். அதுமட்டுமல்ல அவரின் சுபாவம் மாற்றப்பட்டு, பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான் என்று வேதம் அவரைக் குறித்து சாட்சி கூறுகிறது (எண். 12:3). கிறிஸ்துவுடனான ஒரு சந்திப்பு அவருடைய வாழ்வையே மாற்றியது. மனம் திரும்புதல் என்பது நம்மைச் சார்ந்ததே. ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. நம் வாழ்விலும் கர்த்தரை துக்கப்படுத்துகிற பழைய கசப்பு, கோபம், வைராக்கியம், மாம்ச இச்சைகளை விட்டு விட்டு கிறிஸ்துவின் சாயலை பிரதிபலிக்கிறவர்களாய் நாம் காணப்படுவோம்.
- Mrs. வசந்தி ராஜமோகன்
ஜெபக்குறிப்பு:
மோட்சப்பயணம் மாத இதழ் அநேகருக்கு பிரயோஜனமாய் காணப்பட, இதன் மூலம் பக்தி விருத்தியடைய ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250