By Village Missionary Movement
Monday, 19-May-2025இன்றைய தியானம்(Tamil) 19.05.2025
நீங்களே முன்மாதிரி
"...பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே" - நீதிமொழிகள் 17:6
ஒரு ஓய்வு நாள் பள்ளியில் ஆசிரியர் கதை சொல்லுமுன் மாணவர்களிடம், உங்கள் அப்பா காலை எழுந்தவுடன் என்ன செய்வார்கள் எனக் கேட்டதும், முரளி "பேப்பர் படிப்பாங்க" என்றான். வந்தனா "வாக்கிங் போவாங்க" என்றாள். மயில்வாகனன் "விளையாடச் செல்வார்" என்றான். ரமேஷ் "குடிக்கப் போவார்" என்றான். தினேஷ் "முழங்காலில் நின்று ஜெபிப்பார்" என்றான். உடனே டீச்சர் கதையை ஆரம்பித்து சொல்லி முடித்தார்.
ஆம், நம் பிள்ளைகள் நம்மை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நாம் செய்யும் அனைத்துக் காரியங்களையும் ஏன் ஒவ்வொரு அசைவையும் கூட கவனிக்கிறார்கள். நாம் நம் பிள்ளைகளுக்கு அநேக காரியங்களைக் கற்றுக் கொடுப்பதை விட, நாம் அதைச் செய்யும் போது அது நம் பிள்ளைகளுக்கு பழக்கமாகி விடும். பிள்ளைகள் செய்ய விரும்பும் காரியங்களை நாம் செய்வோம். கால சூழ்நிலை, சந்தர்ப்பம் என சுட்டிக் காட்டாமல் நம்மோடு இருந்து நம்மை கவனிக்கும் நம் பிள்ளைகளுக்காக நம் வழியை செவ்வையாக்குவோம். நம் பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள் நம்மிடம் உண்டா என சிந்தித்து, நற்காரியங்களைச் செய்வோம். சொல்லுகிறவர்களாய் மாத்திரமல்ல செய்கிறவர்களாயும் இருப்போம். குடும்ப ஜெபத்தோடு மாத்திரமல்ல தனி ஜெபமும் செய்ய வேண்டும். ஜான் பேட்டன் என்ற ஊழியர் தன் சிறு வயதில் தன் தகப்பன் ஜெப அறைக்குச் சென்று ஜெபிப்பதை பார்த்து ஜெபிக்கக் கற்றுக் கொண்டார். அதோடு மட்டுமல்ல தன் தாயிடமிருந்து விசுவாசத்தைக் கற்றுக் கொண்டதாகவும் கூறினார். இது அவரின் ஊழியப் பாதையில் அவருக்கு புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்தது எனவும் கூறினார். இவர் நியூஹப்ரடீஸ் தீவுகளில் தன் ஊழியத்தை நிறைவேற்றினார். அங்குள்ள மக்கள் நாகரீகம் அறியாதவர்கள், மனிதர்களைக் கொன்று தின்பவர்கள். பெற்றோரிடம் அவர் கற்றுக் கொண்ட காரியம் அவருக்கு தன் வாழ்நாள் முழுவதும் உறுதுணையாயிருந்தது.
பெற்றோராகிய நாம் சிந்திப்போம். நான் என் பிள்ளைகள் முன் எந்த தவறும் செய்யவில்லை என இரட்டை வாழ்க்கை வாழ்கிறோமா? நம் பிள்ளைகள் அதை அறிவர். அவர்கள் வளர்ந்து வரும் போது அதே செயலைச் செய்வர். கர்த்தருக்கு பயந்து நீதியாய் வாழ்வோம். நல்ல முன்மாதிரியாய் வாழ முயற்சிப்போம். அந்த ஞாயிறு பள்ளி ஆசிரியர் அன்று கேட்ட கேள்வியை இன்று நம் பிள்ளைகளிடம் கேட்டால் அவர்களின் பதில் எதுவாயிருக்கும் சிந்திப்போம்! செயல்படுவோம்! சீர்படுவோம்!.
- Mrs. கிரேஸ் ஜீவமணி
ஜெபக்குறிப்பு:
VBS ஊழியத்திற்கென்று ஊழியர்கள் எடுக்கும் முயற்சிக்கு பலனாய் தேவன் சிறுவர்களை கொள்ளைப் பொருளாய்த் தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864