By Village Missionary Movement
Friday, 16-May-2025இன்றைய தியானம்(Tamil) 16.05.2025
தீமையென்னும் பேராபத்து
"நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்;…" - ஆமோஸ் 5:14
ஒரு மூத்த ஊழியர் தனது செய்தியில் ஒரு சம்பவத்தை கூறினார். அச்சம்பவத்தின் சாராம்சம் இதுதான். இரு ஊர்களுக்கு இடையே பல காலமாக சண்டை, விரோதம். ஒருநாள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு மாடு ஒன்று சென்றுவிட்டது. அவ்வூரை சார்ந்த ஒருவர் அந்த மாட்டை பிடித்து அந்த மாடு உயிருடன் இருக்கும் போதே அதன் தோலை உரித்தான். அந்த மாடு வலியால் துடித்தது. கதறி கதறி அதன் உயிரும் போய்விட்டது. ஆண்டுகள் பல கழிந்தன. அம்மாட்டின் தோலை உரித்த நபருக்கு திருமணமாகி ஏழு ஆண் குழந்தைகள் பிறந்தது. ஏழு ஆண்பிள்ளைகளின் கைகளும், கால்களும் மாட்டின் கால்களை போல இருந்ததாம்.
ஆண்டவரை அறியாத ஒரு நபர் அந்த மாட்டிற்கு செய்ததையே கண்டு அதற்கு பதிலளிப்பாரானால் தேவனை அறிந்த, அவரையே முழுவதுமாய் நம்பிக் கொண்டிருக்கிற உங்களுக்கு விரோதமாய் தீமை செய்கிறவர்களை கண்டும், காணாதவர் போலிருக்கிறார் என எண்ணுகிறீர்களோ, "தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்" (யோபு 5:12) என்றும் வேதம் கூறுகிறதே. எனவே கலங்காதிருங்கள். இதை போலவே யோசுவாவின் நாட்களுக்கு பின், யூதா கானானியரோடு யுத்தம் செய்ய கர்த்தருடைய வழிநடத்துதலின் படி சென்றான். அங்கு பேசேக் என்னுமிடத்தில் அதோனிபேசேக் என்பவனை பிடித்து அவன் கைகால்களின் பெருவிரல்களை வெட்டிப் போட்டார்கள். இது தற்செயலாய் நடந்தது போல இருந்தாலும் அதில் தேவனுடைய நியாயத்தீர்ப்பும் உள்ளது. ஆம், நியாயாதிபதிகள் 1:7 ல் அதோனிபேசேக்: "எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள், நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார்" என்றான். அவனை எருசலேமுக்கு கொண்டு போனார்கள். அவன் அங்கே செத்துப் போனான் என்பதாய் வேதம் கூறுகிறது.
ஆம், பிரியமானவர்களே! அதோனிபேசேக் ஏழுபது ராஜாக்களுக்கும் என்ன செய்தானோ அதே போலவே அவனுக்கும் நடந்தது. வாய் பேச இயலாத அந்த மிருகஜீவனுக்கு ஏற்படுத்திய பாதகம், அச்செயலை செய்த நபருக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பாய் வெளிப்பட்டது. தீயநோக்கம் பாவமாம் (நீதி. 24:9), தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்கள் (நீதி. 14:22) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஒருவருக்கு விரோதமாக தீமையை சிந்தியாதிருங்கள். நன்மையை யோசிக்கிறவர்களுக்கு ஜீவனும், கனமும் உண்டு. நன்மையை மாத்திரம் யோசிப்போம். தேவாசீர்வாதம் பெறுவோம். அல்லேலூயா!.
- R.மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:-
VBS பாட கதைகள் அனேக சிறுவர் உள்ளங்களில் மாற்றத்தைக் கட்டளையிட ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864