Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08.05.2025
Share:

By Village Missionary Movement

Thursday, 08-May-2025

இன்றைய தியானம்(Tamil) 08.05.2025

 

எனக்குத் தகுதி உண்டா?

 

"...கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்" - 1 சாமுவேல் 3:21

 

12 வயதுள்ள மானாசி என்னும் சீன நாட்டுச் சிறுவனின் தகப்பனைத் தேடி குதிரையில் ஒருவர் வேகமாய் வந்தார். போதகரான அவனுடைய தந்தை வீட்டில் இல்லாததால் இந்த சிறு பையனிடம் வந்தவர், "என் நெருங்கிய நண்பர் வீட்டிலுள்ள ஒரு பெண்ணுக்காக ஜெபிக்க வேண்டும். தன் துணியைக் கிழித்து தலைமுடியைப் பிய்த்துக் கொள்கிறாள். பொருள்களை வெளியே வீசி எறிகிறாள். அருகில் செல்வோரை அடிக்கிறாள். ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உன் தகப்பன் வர நேரம் ஆகுமானால், ஜெபிப்பதற்கு நீ வா... நீயும் இயேசுவின் பிள்ளைதானே" என்று அவனை வருந்தி அழைத்தார். 

 

மானாசி தன்னை முழுவதும் இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்திருந்தபடியால் அவரோடு சென்றான். செல்லும் வழியெல்லாம் ஜெபித்துக் கொண்டே சென்றான். "நான் தேவனால் பயன்படுத்தப்படுவதற்குத் தகுதிதானா? என்னுடைய இருதயம் சுத்தமானதுதானா? பாவக்கறைகள் என்னுள்ளத்தில் உண்டா?" என்று தன்னைத் தானே ஆராய்ந்து கொண்டும் ஜெபித்துக் கொண்டும் சென்றான். அந்தப் பெண்ணுக்கு ஜெபிப்பது, தேவசித்தம் என உணர்ந்து கொண்டவன் "சின்ன சாமுவேலைப்" போல தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். இவன் வருகையை அறிந்த பிசாசு, ''மானாசி என்ற தேவ மனிதன் வருகிறான், என்னை விட்டு விடுங்கள் நான் போய் விடுகிறேன், என்னால் அவனை சந்திக்க முடியாது'' என்றது. 

 

வீட்டிற்குள் வந்த மானாசி, "ஆண்டவரே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்" என்று ஜெபித்து ஒரு பாடலைப் பாடி, முழங்கால்படியிட்டு ஜெபித்து, பிசாசு அப்பெண்ணை விட்டு வெளியேறும்படி இயேசுவின் நாமத்தில் கட்டளையிட்டான். உடனே பிசாசு வெளியேறியது. அவள் சுகமானாள். இதைக் கண்ட அநேகர் அன்றுமுதல் கர்த்தரைப் பற்றிக் கொள்ள ஆரம்பித்தனர். ஆண்டவர் இயேசுவின் நாமம் மகிமையடைந்தது. இதை வாசிக்கும் அருமையான தேவப் பிள்ளையே, ஊழியத்திற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்றோ, எனக்கெல்லாம் தகுதியில்லை என்றோ, எனக்கு ஊழியம் செய்யத் தெரியாது என்றோ உங்களை நீங்களே நினைத்து ஒதுங்கி விடாதீர்கள். நம்முடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. ( 2 கொரிந்தியர் 3:5)

 

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே யார்யாருடைய பாவங்களெல்லாம் கழுவப்பட்டு சுத்திகரிக்கப்பட்டவர்களாய் இருக்கிறோமோ, அத்தனை பேர்களும் தேவனுக்கு ஊழியம் செய்யத் தகுதி உள்ளவர்களே. லேகியோன் பிசாசிடமிருந்து விடுதலை அடைந்த கல்லறை மனிதனுக்கும்கூட இயேசு அவனுடைய இனத்தாரிடம் சாட்சி சொல்ல "சாட்சியின் ஊழியத்தை" கொடுத்திருந்தாரே. ஆதலால் கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலகி தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான், அவன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கிறான். ஆதலால் பிரியமானவர்களே! இயேசுவின் இரத்தத்தால் தினமும் சுத்திகரிக்கப்பட்டவர்களாய் ஊழியம் செய்வோமாக! அப்பொழுது "இயேசு" என்னும் நாமம் மகிமைப்படும்.

- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்

 

ஜெபக்குறிப்பு 

VBS ஊழியத்திற்கு எல்லா கிராமங்களிலும் திறந்த வாசலை தேவன் கட்டளையிட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al