By Village Missionary Movement
Saturday, 03-May-2025இன்றைய தியானம்(Tamil) 03.05.2025
திருவிருந்து
"நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்" - 1 கொரிந்தியர் 11:31
கர்த்தருடைய பந்தியாகிய திருவிருந்தை நாம் அனுசரிக்கும் போதும் இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய அப்பத்தை நாம் புசிக்கும்போதும், அவருடைய இரத்தமாகிய திராட்சை ரசத்தைப் பானம் பண்ணும்போதும் அவரை நினைவுகூரவேண்டுமென்று சொல்லியிருக்கிறார். நாம் எப்படி இயேசுவை நினைவுகூர்ந்து திருவிருந்தை ஆசரிக்கிறோம்? அதை ஒரு கிறிஸ்தவ சடங்காச்சாரமாக, கிறிஸ்துவைப் பற்றிய எந்த உணர்வுமின்றி ஆசரிக்கிறோமா அல்லது அவரைத் தகுந்தவிதமாக நினைவுகூர்ந்து ஆசரிக்கிறோமா? என்பதை நாம் அதிகமாக சிந்தித்து செயல்பட தேவ ஆவியானவர் விரும்புகிறார்.
ஒவ்வொரு திருவிருந்து ஆயத்த ஜெபத்திலும் "கர்த்தாவே, உமது மரணத்தை நினைவு கூறுகிறோம் என்று முதல் அறிக்கை செய்கிறோம். நம் பாவங்களுக்காக இயேசு இரத்தம் சிந்தி, நமக்கு இலவசமாக பாவமன்னிப்பை அருளி, பிதாவோடு நம்மை ஒப்புரவாக்கியிருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து அவருக்கு நன்றிசொல்ல வேண்டும். ஒவ்வொரு திருவிருந்து ஆராதனைக்கு முன்னும் சற்று நேரம் ஒதுக்கி, நம்மை நாமே தேவ சமுகத்தில் நிதானித்து ஆராய்ந்து அறிய வேண்டும். நம் பாவங்களை, நாம் செய்யும் சிறு தவறுகளைகூட இயேசுவிடத்தில் அறிக்கை செய்து அவருடைய இரத்தத்தால் நம் சரீரம், ஆத்துமா கழுவப்பட வேண்டும்.
இரண்டாவது அறிக்கையாக, "உமது உயிர்த்தெழுதலை அறிக்கையிடுகிறோம்" என்று கூறுகிறோம். அவர் எதற்காக உயிர்த்தெழுந்தார்? நம் ஒவ்வொருவருடனும் சதாகாலங்களிலும் இருப்பதற்காக என்பதை உணர்ந்து அவரை ஸ்தோத்தரிக்க வேண்டும். மூன்றாவதாக, நீர் திரும்பவர காத்திருக்கிறோம்" என்று அறிக்கை செய்கிறோம். அப்படியானால் அவர் வருகையை அனுதினம் எதிர்நோக்கி, மிகுந்த ஜாக்கிரதையோடு அவருடைய வருகைக்காக ஆயத்தப்படுகிறோமா? சிந்திப்போம்.
மேற்கண்ட மூன்று அறிக்கைகளையும் நாம் உண்மையாக, அதை உணர்ந்தவர்களாக செய்ய வேண்டும். ஏனென்றால் தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாதே என்று வேதம் சொல்கிறது. (பிர. 5: 2)
பிரியமானவர்களே! இதுவரை இத்தகைய உண்மையான அறிக்கைகளோடு திருவிருந்தில் பங்கு பெறாதவர்களாக இருந்தால், நாம் நியாயம் தீர்க்கப்படாதபடி, இந்த கிருபையின் காலத்தில் நம்மை நாமே நிதானித்து அறிந்து, சரிசெய்து கொள்ள தீர்மானிப்போமாக. தேவன் தாமே கிருபை பாராட்டுவாராக.
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:-
வாலிபர் கூடுகையில் கலந்து கொண்ட வாலிபர்கள் பெற்றுக்கொண்ட அபிஷேகத்தைக் காத்துக் கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864