By Village Missionary Movement
Friday, 02-May-2025இன்றைய தியானம்(Tamil) 02.05.2025
வாய் திறக்கப்பட்ட கழுதை
“எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்” - பிலிப்பியர் 2:16
கழுதைன்னு நாம் மற்றவர்களைத் திட்டுவது வழக்கம். ஆனால் கழுதையிடமும் கற்றுக் கொள்ளக் கூடிய காரியங்கள் உண்டு. இன்று நாம் பிலேயாம் தீர்க்கதரிசியின் கழுதையை பற்றி பார்ப்போம். பிலேயாம் தீர்க்கதரிசியை இஸ்ரவேல் ஜனங்களை சபிக்கும்படி பாலாக் ராஜா அழைக்கிறார். தீர்க்கதரிசி தேவனிடம் விசாரிக்கிறார். தேவன் போக வேண்டாம் என்கிறார். ராஜா அனுப்பிவிட்ட நபர்களிடம் நான் வரவில்லை என்கிறார். ராஜா மறுபடியும் கனவான்களை அனுப்புகிறார். பிலேயாம் தீர்க்கதரிசி தேவன் சம்மதிக்கவில்லை என்று சொல்லி அனுப்பிவிடாமல் மறுபடியும் தேவனிடம் விசாரிக்கிறார். தேவன் கோபம் மூண்டவராய் போ என்கிறார்.
தீர்க்கதரிசி தன் கழுதை மேல் ஏறிச் செல்கிறார். அப்போது ஒரு தூதன் உருவின பட்டயத்தோடு வழியில் நிற்பதை கழுதை பார்த்தது. உடனே கழுதை வழிவிலகி வயலில் சென்றது. தீர்க்கதரிசி கழுதையை அடித்தார். பின் இருபுறமும் சுவரிருந்த திராட்சத் தோட்டத்தின் வழியாக செல்லும்போது உருவின பட்டயத்தோடு தூதன் நின்றார். இப்போதும் கழுதை கண்டு தீர்க்கதரிசியின் காலை சுவர்புறமாக நெருக்கிற்று. தீர்க்கதரிசி தடியினால் கழுதையை அடித்தார். கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார். கழுதை முறுமுறுக்காமல், புலம்பாமல் நிதானமாய் நான் உம்மிடம் இதுபோல் என்றாகிலும் நடந்ததுண்டா ? என்றது. கழுதை தீர்க்கதரிசியின் ஜீவனை காக்க நன்மை செய்து தீங்கு அனுபவித்தது. வாய் திறந்து பேச தேவன் கழுதைக்கு வாய்ப்பளித்ததும், தன் எஜமானை குற்றப்படுத்தி, முறுமுறுத்து புலம்பியிருக்கலாம். ஆனால் இதில் எதையும் செய்யாமல் பொறுமையாய் நான் இப்படி நடந்ததுண்டா? எனக் கேட்கிறது. உடனே கர்த்தரே பேசுகிறார். அங்கு முதலாவது கர்த்தர் கழுதைக்கான நியாயத்தைக் கேட்கிறார்.
பிரியமானவர்களே! நீங்களும் கூட உங்கள் வீட்டில், வேலை ஸ்தலத்தில் உண்மையாய் இருந்து துன்பத்தை அனுபவிக்கிறேன் என்கிறீர்களா ? தேவன் உங்கள் உண்மையை ஒருநாள் விளங்கப் பண்ணுவார். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் (நீதி 28:20) என்ற வசனத்தின்படி பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். நீங்கள் என் தரப்பு நியாயத்தை பேசவே முடியவில்லை என புலம்புகிறீர்களா ? இருதயத்தில் முறுமுறுத்து புலம்பிக் கொண்டுள்ளீர்களா ? இன்று முறுமுறுப்பதை புலம்புவதை நிறுத்துங்கள். உங்களைக் காண்கிற கர்த்தர் உங்களுக்கு நடக்கும் தீங்கையும் காண்கிறார். அவர் உங்களுக்காக வழக்காடுவார். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1பேதுரு5:7) என்ற வசனத்தின்படி, அவர்மேல் வைத்து விட்டு அமைதியாயிருங்கள். நீங்கள் பேச வேண்டிய காரியங்களை தேவன் உங்களுக்காக பேசுவார். பொறுமையாய் சகியுங்கள் கர்த்தர் உங்களுக்காக வழக்காடுவார்.
- Bro. K.டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு
முகாமிற்கான மீதமுள்ள தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864