By Village Missionary Movement
Tuesday, 29-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 29.04.2025
பத்திரமாய் பார்த்து கொள்வேன்
"...நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்;..." - எரேமியா 40:4
செப். 11 நியூயார்க் உலகவர்த்தக கட்டிடம் தாக்கப்பட்ட போது தன்னுடைய இரண்டு கண்களும் தெரியாத பீட்டி என்ற எஜமானரை ரகசிய பாதைவழியாய் பாதுகாப்பாக காப்பாற்றி கொண்டு வந்தது அவருடைய நாய் ரோஸி. தன் எஜமானரை காப்பாற்றிய பின் மறுபடியுமாய் உள்ளே சென்ற ரோஸி நாய் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி தன் உயிரை விட்டது. தன்னை போஷித்து காப்பாற்றியதற்கு நன்றி செலுத்தும் வகையில் பத்திரமாய் தன் எஜமானை மீட்டது.
ஒரு ஏழை விதவைக்கு ஒரு மகன் மாத்திரம் உண்டு, அவனும் சிறுவன். ஊரெங்கும் பஞ்சம். அவள் வீட்டில் இருந்தது கொஞ்சம் மாவும், சிறிதளவு எண்ணெயுமே. அந்த மாவையும், எண்ணெயையும் வைத்து எத்தனை நாட்களைத்தான் கடத்த முடியும், ஒரு நாள் பேசாமல் இவற்றை சாப்பிட்டு விட்டு இருவரும் செத்துவிடலாம் என்று முடிவு செய்து சாறிபாத் ஊரின் ஒலிமுக வாசலண்டை விறகு பொறுக்கச் சென்றாள். விறகுகளை பொறுக்கும் போது எவ்வளவாய் அவள் உள்ளம் கலங்கியிருக்கும். அங்கு தேவ கட்டளையின் படி எலியா தீர்க்கதரிசி வருகிறார், அவளிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார். வீட்டின் உள்ளே செல்ல இருந்தவளிடம் சிறிய அடையை சுட்டுத் தரும்படியாய் கூறினார். அந்த விதவை தன் நிலையை எடுத்து கூறுகிறாள். நானும் என் மகனும் இந்த கொஞ்சம் மாவில் அடையைச் சுட்டு தின்று விட்டு செத்து போக போகிறோம் என்று எலியா தீர்க்கதரிசியிடம் கூறினாள். அவர் "முதலில் அதனை எனக்கு சுடு" என்றார். அந்த விதவை தாய் கீழ்ப்படிந்தாள். அவளுக்கு அடையை சுட்டபின்னும் பானையில் மாவு குறையவில்லை, கலசத்தில் எண்ணெய் குறையவில்லை. அவளும், அவள் வீட்டாரும் அநேகநாள் திருப்தியாக சாப்பிட்டார்களாம்.
ஆம் பிரியமானவர்களே! பல சமயங்களில் நம்முடைய வாழ்விலும் இதுதான் கடைசி தருணம், இனி வாழ்வதற்கு வழியில்லை என்று நினைப்பவரா நீங்கள்? உங்களிடம் தான் தேவன் பேசுகிறார். "நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன் (எரேமியா 40:4) என்று. கலங்காதிருங்கள், நம் தேவன் இன்றும் நம்மேல் கரிசனையுள்ளவராயிருக்கிறார். உங்கள் இழப்புகள், தோல்விகள், குறைவுகளை எல்லாம் மாற்றி அவருடைய பரிபூரண ஆசீர்வாதங்களால் நிரப்புவார். தேவன் நம்மை பத்திரமாய் பார்த்து கொள்ளும் போது வீண் கவலை எதற்கு? கர்த்தர் மேல் உங்கள் பாரத்தை, கவலையை வைத்து விடுங்கள் அவரே ஆதரிப்பார். அல்லேலுயா!
- Sis. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
இவ்வாண்டில் 1000 மிஷனெரிகள் நம்மோடு இணைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864